போலி பாஸ்போர்ட் வழக்கில் மேலும் 2 பேர் கைது இலங்கையை சேர்ந்தவர்கள்

சென்னையில் போலி பாஸ்போர்ட் தயாரிக்கும் கும்பலை சேர்ந்தவர்களை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து வருகிறார்கள்.

Update: 2018-07-13 19:28 GMT
சென்னை, 

சென்னையில் போலி பாஸ்போர்ட் தயாரிக்கும் கும்பலை சேர்ந்தவர்களை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து வருகிறார்கள். கடந்த மாதம் (ஜூன்) திருவல்லிக்கேணியை சேர்ந்த டிராவல்ஸ் அதிபர் வீரக்குமார், அவருடைய தம்பி பாலு உள்ளிட்ட 11 பேரை போலீசார் கைது செய்தனர்.

இவர்கள், காலாவதியான பழைய பாஸ்போர்ட்டுகளை விலைக்கு வாங்கி அதில் உள்ள புகைப்படத்தை அகற்றிவிட்டு, பாஸ்போர்ட் விரும்புபவர்களின் புகைப்படத்தை ஒட்டி போலியான பாஸ்போர்ட்டுகளை தயாரித்து ரூ.5 லட்சம் வரை விற்பனை செய்துள்ளனர்.

இந்த வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த சென்னை குன்றத்தூரில் இருந்த தேவிகா (வயது 38) என்ற பெண்ணையும், கிருஷ்ணராஜ் (37) என்பவரையும் மத்திய குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் கண்ணா நேற்று கைது செய்தார். இவர்கள் இருவரும் இலங்கையை சேர்ந்தவர்கள் ஆவார்கள். இருவரும் சென்னையில் தங்கி, போலி பாஸ்போர்ட் தயாரிப்பதற்கு உறுதுணையாக இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்