நடிகைகளை விபசாரத்துக்கு அழைத்த 2 பேர் கைது

மாதம் ரூ.30 ஆயிரம் முதல் ரூ.30 லட்சம் வரை சம்பாதிக்கலாம் என்று ஆசைகாட்டி, நடிகைகளுக்கு விபசாரத்துக்கு அழைப்பு விடுத்து ஒரு கும்பல் ‘வாட்ஸ்–அப்’ மூலம் தகவல் அனுப்பி தொல்லை கொடுத்தது.

Update: 2018-07-13 22:00 GMT
சென்னை, 

மாதம் ரூ.30 ஆயிரம் முதல் ரூ.30 லட்சம் வரை சம்பாதிக்கலாம் என்று ஆசைகாட்டி, நடிகைகளுக்கு விபசாரத்துக்கு அழைப்பு விடுத்து ஒரு கும்பல் ‘வாட்ஸ்–அப்’ மூலம் தகவல் அனுப்பி தொல்லை கொடுத்தது. அந்த கும்பலை சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

நடிகைகளுக்கு ‘வாட்ஸ்–அப்’ மூலம் விபசாரத்துக்கு அழைப்பு விடுத்து ஒரு கும்பல் செக்ஸ் வலை வீசியது. அந்த கும்பலை சேர்ந்தவர்கள் அனுப்பிய ‘வாட்ஸ்–அப்’ தகவலில் முக்கிய பிரமுகர்களுக்கு உல்லாச விருந்து படைத்தால் மாதம் ரூ.30 ஆயிரம் முதல் ரூ.30 லட்சம் வரை எளிதில் சம்பாதிக்கலாம். உங்களை பற்றிய விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும்.

விருப்பம் இருந்தால் தொடர்புகொள்ளுங்கள் என்று பிரபல நடிகைகளுக்கு ‘வாட்ஸ்–அப்’ மூலம் தகவல் அனுப்பி இருந்தனர். இதுபோன்ற ‘வாட்ஸ்–அப்’ அழைப்பு பிரபல நடிகைகளுக்கு தொடர்ந்து வந்தவண்ணம் இருந்தது.

இதேபோல வாடிக்கையாளர்களுக்கும் அழைப்புவிடுத்து, குறிப்பிட்ட நடிகைகளின் புகைப்படங்களுடன் ஒவ்வொரு நடிகைக்கும் உல்லாசத்திற்கான விலையும் நிர்ணயித்து அந்த கும்பலை சேர்ந்தவர்கள் தகவல் அனுப்பினர். இந்த ‘வாட்ஸ்–அப்’ தகவலை எந்த நடிகையும் பெரிதுபடுத்தாததால் புகார் கொடுக்க முன்வரவில்லை.

ஆனால் நடிகை ஜெயலட்சுமி துணிச்சலாக நடிகைகளுக்கு விபசார அழைப்பு விடுத்த கும்பலை போலீசில் பிடித்துக் கொடுக்க நடவடிக்கையில் இறங்கினார். நடிகை ஜெயலட்சுமி ‘நேபாளி’ படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். இவர் 30–க்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார். தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வருகிறார்.

இவர் சென்னை அண்ணா நகரில் குடும்பத்தோடு வசிக்கிறார். இவர் சென்னை போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதனை சந்தித்து தனக்கு ‘வாட்ஸ்–அப்’பில் வந்த தகவல்களை அவரிடம் காட்டி அதை அனுப்பியவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் மனு ஒன்றையும் கொடுத்தார்.

இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார். சென்னை விபசார தடுப்பு போலீசார் சைபர் கிரைம் போலீசாரின் ஒத்துழைப்போடு இதுபற்றி விசாரணை நடத்தினார்கள்.

போலீஸ் விசாரணையில் நடிகைகளுக்கு ‘வாட்ஸ்–அப்’ மூலம் விபசார அழைப்பு விடுத்த நபர்கள் யார்? என்று தெரியவந்தது. அவர்களது பெயர் முருகப்பெருமான், கவியரசன் என்றும், இருவரும் சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்தவர்கள் என்றும் தெரிந்தது. அவர்களுடன் பெண் போலீசார் நடிகைகளைப்போல நைசாகப்பேசி, அண்ணா நகர் பகுதிக்கு வரவழைத்தனர்.

அவர்கள் இருவரையும் போலீசார் மடக்கிப்பிடித்து அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியபோது திடுக்கிடும் தகவல் வெளியானது. அவர்களது செல்போன்களை ஆய்வு செய்தபோது, அதில் 70–க்கும் மேற்பட்ட பெண்களின் புகைப்படங்கள் இருந்தன. பிரபல நடிகைகளின் புகைப்படங்களும், துணை நடிகைகளின் புகைப்படங்களும் காணப்பட்டன. அந்த செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

அவர்கள் பிரபல நடிகை ஒருவருக்கு ரூ.40 லட்சம் கொடுத்தால் உங்கள் படுக்கையை பகிர்ந்துகொள்வார் என்று ‘வாட்ஸ்–அப்’பில் தகவல் வெளியிட்டு இருந்தனர். ஆனால் அந்த நடிகைக்கு தற்போது திருமணம் ஆகிவிட்டதால் ரூ.40 லட்சம் தரமாட்டோம், ரூ.3 லட்சம் தருகிறோம் என்று வாடிக்கையாளர் ஒருவர் பதில் அளித்திருந்ததும் ‘வாட்ஸ்–அப்’ தகவலில் இருந்தது.

கைது செய்யப்பட்ட முருகப்பெருமானும், கவியரசனும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இவர்கள் ‘ரிலேசன்ஷிப் டேட்டிங் சர்வீஸ்’ என்ற பெயரில் ‘வாட்ஸ்–அப்’பில் ஒரு நண்பர்கள் குழுவை உருவாக்கி இருந்தனர். அந்த குழுவில் ஏராளமான இளைஞர்கள் சேர்ந்து இருந்தனர். அவர்கள் நடிகைகளை மட்டுமல்லாது, அழகான இளம்பெண்களை வலையில் வீழ்த்தவும் ஒருவருக்கொருவர் பேசிக் கொண்ட தகவல்களும் ‘வாட்ஸ்–அப்’பில் பதிவாகி இருந்தது.

இதுபற்றி நடிகை ஜெயலட்சுமி அளித்த பேட்டியில் கூறியதாவது:–

2 வாரங்களுக்கு முன்பு எனது செல்போனுக்கு ‘வாட்ஸ்–அப்’ மூலம் அடுத்தடுத்து தகவல்களை அனுப்பினார்கள். அதில் வெளியில் சொல்லமுடியாத அளவிற்கு ஆபாசமாக தகவல்களை வெளியிட்டு இருந்தனர். எனக்கு அழைப்பு விடுத்தவர்களிடம், ‘நான் அதுபோன்ற பெண் இல்லை’ என்று பதிலுக்கு தகவல் அனுப்பினேன்.

இதுபற்றி எனது நண்பர்களிடம் தெரிவித்தேன். அவர்கள் இதை சாதாரணமாக விடக்கூடாது, போலீஸ் கமி‌ஷனரை சந்தித்து புகார் கொடுத்து தகவல் அனுப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்கள். அதன்பிறகு எனக்கு தெரிந்த வக்கீல்கள் மூலமாக போலீஸ் கமி‌ஷனரை சந்தித்து புகார் மனு கொடுத்தேன். அவர் உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளார். தற்போது 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதுபோன்ற தகவல்கள் அனுப்பும் ‘வாட்ஸ்–அப்’ குழுவில் மேலும் நிறையபேர் இருக்கலாம் என்று கருதுகிறேன். அவர்களையும் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். நடிப்பு எனது தொழில். நாங்களும் மனிதர்கள் தான். எங்களுக்கும் குழந்தைகள், குடும்பம் உள்ளது. நாங்கள் கவுரவமாக வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். இதுபோல் தொல்லை கொடுப்பவர்கள் மீது துணிச்சலாக புகார் கொடுக்க வேண்டும் என்று மற்ற நடிகைகளுக்கும், இளம்பெண்களுக்கும் எனது வேண்டுகோளாக வைக்கிறேன்.

சினிமாவில் நடிக்கும் நடிகைகள் சந்தோ‌ஷமாக, ஆடம்பரமாக வாழ்கிறார்கள் என்று நினைக்கிறார்கள். ஆனால் அதில் உள்ள கஷ்டம் எங்களுக்குத்தான் தெரியும். குழந்தைகளை படிக்கவைக்க பணம் இல்லாமல், வீட்டு வாடகைக்கூட கொடுக்க முடியாமல் கஷ்டப்படுகிறோம். ஆனாலும் கவுரவமாக வாழ்கிறோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நடிகை ஜெயலட்சுமி இதுதொடர்பாக மற்ற நடிகைகளுக்கும், இளம்பெண்களுக்கும் வேண்டுகோள் விடுத்து ஒரு வீடியோ காட்சியையும் ‘வாட்ஸ்–அப்’பில் வெளியிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்