கலர் டி.வி. கொள்முதலில் முறைகேடு: முன்னாள் அமைச்சரை கீழ் கோர்ட்டு விடுதலை செய்தது சரியே ஐகோர்ட்டு தீர்ப்பு

கலர் டி.வி. கொள்முதலில் முறைகேடு நடந்ததாக சி.பி.ஐ. தொடர்ந்த வழக்கில் இருந்து முன்னாள் அமைச்சர் செல்வகணபதியை கீழ் கோர்ட்டு விடுதலை செய்தது சரியே என்று சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

Update: 2018-07-31 22:10 GMT
சென்னை, 

தமிழகத்தில் 1991-1996-ம் ஆண்டு வரை நடந்த அ.தி.மு.க. ஆட்சியின்போது, கிராம பஞ்சாயத்துக்களுக்கு கலர் டி.வி. கொள்முதல் செய்யப்பட்டது. இதில் முறைகேடு நடந்ததாகவும், இந்த கொள்முதல் மூலம் அரசுக்கு ரூ.82 லட்சத்து 25 ஆயிரம் இழப்பு ஏற்பட்டதாகவும், சி.பி.ஐ. போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சராக அப்போது பதவி வகித்த டி.எம்.செல்வகணபதி, எலக்ட்ரானிக் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா என்ற மத்திய அரசின் பொது நிறுவனத்தின் அதிகாரிகள் பொம்றவநாயக்கன், புருஷோத்தமன் ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

விடுதலை

இந்த வழக்கை விசாரித்த சென்னை சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு நீதிபதி கே.நாகநாதன் கடந்த 2009-ம் ஆண்டு தீர்ப்பு அளித்தார். அதில், ‘கலர் டி.வி. கொள்முதல் செய்ய முறையாக குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் செல்வகணபதி உள்ளிட்ட 3 பேருக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை. அதனால், 3 பேரையும் வழக்கில் இருந்து விடுதலை செய் கிறேன்’ என்று நீதிபதி கூறியிருந்தார்.

இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் சி.பி.ஐ. மேல்முறையீடு செய்தது.

தீர்ப்பு சரி

இந்த மேல்முறையீட்டு வழக்கை நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் விசாரித்தார். நேற்று அவர் தீர்ப்பு அளித்தார். அவரும், செல்வகணபதி உள்ளிட்ட 3 பேருக்கு எதிரான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை. அதனால், கீழ் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பு சரியானது. இந்த மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்கிறேன் என்று தீர்ப்பில் கூறியுள்ளார். 

மேலும் செய்திகள்