ஈரானில் தவித்த தமிழக மீனவர்கள் 21 பேர் மீட்பு சுஷ்மா சுவராஜ் நடவடிக்கை

ஈரானில் தவித்த தமிழக மீனவர்கள் 21 பேர் மீட்பு சுஷ்மா சுவராஜ் நடவடிக்கை

Update: 2018-08-01 22:00 GMT
சென்னை, 

ஈரானில் தவித்த தமிழக மீனவர்கள் 21 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும், பல்வேறு குழுக்களாக நாளை முதல் தமிழகம் அழைத்து வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.

நெல்லை, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 21 மீனவர்கள் ஈரான் நாட்டுக்கு மீன் பிடிக்கும் வேலை செய்ய சென்றனர். அங்குள்ள விசைப்படகு உரிமையாளர் ஒருவருக்கு 6 மாதங்களாக மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வந்தனர். ஆனால், அவர்களுக்கு மீன்பிடித்ததற்கான சம்பளம் வழங்காமலும், உணவு கொடுக்காமலும் விசைப்படகு உரிமையாளர் கொடுமைபடுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

மேலும், பாஸ்போர்ட் மற்றும் அடையாள அட்டைகளை பிடுங்கிக்கொண்டு, தங்கியிருந்த அறையிலிருந்தும் தமிழக மீனவர்கள் வெளியேற்றப்பட்டனர். இதனால் வேலை செய்ய முடியாமலும், நாடு திரும்ப முடியாமலும் தமிழக மீனவர்கள் தவித்தனர். ஈரான் நாட்டில் அகதிகள் போல சுற்றித்திரிந்தனர்.

பாதிக்கப்பட்ட மீனவர்கள் இதுதொடர்பாக தமிழகத்தில் உள்ள தங்கள் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து உறவினர்கள் ஈரானில் தவிக்கும் மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கோரிக்கை விடுத்தனர். இதன் அடிப்படையில் ஈரானில் தவிக்கும் தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு, எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதினார்.

இதேபோல தி.மு.க. மகளிரணி செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழியும், ஈரானில் தவித்து வரும் தமிழகத்தை சேர்ந்த 21 மீனவர்களும் பாதுகாப்பாக நாடு திரும்ப நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜூக்கு கடந்த மாதம் 19-ந் தேதி கடிதம் எழுதியிருந்தார். தமிழகத்தின் வேண்டுகோளை ஏற்று ஈரானில் தவித்த தமிழக மீனவர்களை மீட்கும் முயற்சியில் வெளியுறவுத்துறை இறங்கியது.

இதுகுறித்து வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

பந்தர் அப்பாஸ் மற்றும் ஈரானில் உள்ள இந்திய தூதரகங்கள் மேற்கொண்ட நடவடிக்கைகள் மூலம் நகிதக்கி பகுதியில் தனித்து விடப்பட்டிருந்த தமிழகத்தை சேர்ந்த 21 இந்திய மீனவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரையும் நாளை (3-ந் தேதி) பல்வேறு குழுக்களாக தாயகம் அழைத்து வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்