முதல்-அமைச்சர் பற்றி முகநூல் பக்கத்தில் அவதூறு தகவல் குவைத்தில் வேலை பார்த்த வாலிபர் கைது

சென்னை அண்ணாநகர் மேற்கு பகுதியில் வசிக்கும் முருகையா என்பவர் சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதனை சந்தித்து பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார்.

Update: 2018-08-02 21:52 GMT
சென்னை, 
சென்னை அண்ணாநகர் மேற்கு பகுதியில் வசிக்கும் முருகையா என்பவர் சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதனை சந்தித்து பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த புகார் மனுவில் கூறி இருப்பதாவது:-

தமிழக முதல்-அமைச்சர், துணை முதல் -அமைச்சர், அமைச்சர்கள் மற்றும் பல்வேறு அரசியல் தலைவர்கள் பற்றியும், தமிழக காவல்துறை பற்றியும் சங்கர் தமிழன் என்ற முகநூல் பக்கத்தில் இழிவான, ஆபாசமான அவதூறு தகவல்கள் அடிக்கடி வெளிவருகிறது. வீடியோ படமாகவும் மற்ற முகநூல் பயன்படுத்துவோருக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. இது தொடர்பாக விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்டவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இது தொடர்பாக துணை கமிஷனர் செந்தில்குமார், உதவி கமிஷனர் வேல்முருகன் ஆகியோர் தலைமையில் சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். சங்கர் தமிழன் என்ற பெயரில் முகநூல் பக்கம் வைத்திருப்பவர் பெயர் சங்கரலிங்கம் (வயது 35) என்றும், இவர் குவைத்தில் வேலை பார்க்கிறார் என்றும் தெரிய வந்தது.

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே உள்ள நெடுங்குளம் கிராமம் இவரது சொந்த ஊராகும். சைபர் கிரைம் போலீசார் எடுத்த நடவடிக்கை காரணமாக வாலிபர் சங்கரலிங்கம், குவைத்திலிருந்து விமானம் மூலம் திருவனந்தபுரம் வந்தார். அவரை சைபர் கிரைம் போலீசார் அங்கு கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்தனர். அவர் நீதிமன்ற காவலில் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும் செய்திகள்