வீட்டுப்பாடம் குறித்த உத்தரவை அமல்படுத்தவில்லை என்றால் அனைத்து மாநில கல்வித்துறை செயலாளர்களும் ஆஜராக நேரிடும்

2-ம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் கொடுக்கக்கூடாது என்ற மத்திய அரசு உத்தரவை அமல்படுத்தவில்லை என்றால் அனைத்து மாநில பள்ளி கல்வித்துறை செயலாளர்களையும் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என்று சென்னை ஐகோர்ட்டு எச்சரிக்கை செய்துள்ளது.

Update: 2018-08-10 21:15 GMT
சென்னை,

சென்னை ஐகோர்ட்டில் வக்கீல் எம்.புருஷோத்தமன் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்.சி.இ.ஆர்.டி.) பாடத்திட்ட விதிகளை மீறி சி.பி.எஸ்.இ. பள்ளிகள் 1 முதல் 3-ம் வகுப்பு வரை 8 பாடங்களை போதிக்கின்றன. 2-ம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் கொடுக்கக்கூடாது என்ற விதிகளை மீறி, வீட்டுப்பாடங்களை கொடுக்கின்றனர். இதனால் குழந்தைகள் மனதளவில் பாதிக்கப்படுகின்றனர். எனவே சி.பி.எஸ்.இ. பள்ளிகள் என்.சி.இ.ஆர்.டி. பாடத்திட்டத்தை மட்டுமே பின்பற்ற உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன், ‘சி.பி.எஸ்.இ. பள்ளிகள் மட்டுமல்லாமல் அனைத்து பள்ளிகளிலும் 2-ம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் கொடுக்கக்கூடாது என்று மத்திய அரசு உத்தரவிட வேண்டும். அதேபோல, சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் என்.சி.இ.ஆர்.டி. பாடத்திட்டத்தை மட்டுமே பின்பற்ற வேண்டும்’ என்று உத்தரவிட்டிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி என்.கிருபாகரன் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஐகோர்ட்டு உத்தரவுப்படி 2-ம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் கொடுக்கக்கூடாது என அனைத்து மாநில அரசுகளுக்கும் 2 முறை சுற்றறிக்கை அனுப்பி அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு சார்பில் ஆஜரான உதவி சொலிசிட்டர் ஜெனரல் கார்த்திகேயன் கூறினார்.

ஆனால் இதனை அமல்படுத்த காலஅவகாசம் வேண்டும் என்று தனியார் பள்ளிகள் சார்பில் கோரப்பட்டது.

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதி என்.கிருபாகரன், ‘இந்த உத்தரவை செயல்படுத்த ஏற்கனவே போதுமான காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது. எனவே வருகிற 17-ந்தேதிக்குள் இந்த உத்தரவை அமல்படுத்தாவிட்டால் அனைத்து மாநில பள்ளிகல்வி துறை செயலாளர்களையும் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும்’ என்று எச்சரிக்கை விடுத்தார். வழக்கு விசாரணையையும் 17-ந்தேதிக்கு தள்ளிவைத்தார்.

மேலும் செய்திகள்