மெரினாவில் நினைவிடங்கள் கட்ட எதிர்ப்பு தெரிவித்த வழக்கை தள்ளுபடி செய்தது குறித்து தலைமை நீதிபதியிடம் டிராபிக் ராமசாமி முறையீடு

மெரினாவில் நினைவிடங்கள் கட்ட எதிர்ப்பு தெரிவித்த வழக்கை தள்ளுபடி செய்தது குறித்து தலைமை நீதிபதியிடம் டிராபிக் ராமசாமி முறையிட்டார்.

Update: 2018-08-13 06:59 GMT
சென்னை, 

முன்னாள் முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.கருணாநிதி உடல் நலம் பாதிக்கப்பட்டு கடந்த 7 ஆம் தேதி மரணம் அடைந்தார். இதையடுத்து, கருணாநிதியின்  உடலை மெரினா கடற்கரையில் உள்ள மறைந்த முதல்-அமைச்சர் அண்ணா சமாதி அருகே, புதைக்க அனுமதி வழங்கும்படி தமிழக அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், இதற்கு தமிழக அரசு, அப்போது அனுமதி வழங்கவில்லை.

ஏற்கனவே, மெரினா கடற்கரையில் உள்ள தலைவர்களின் சமாதிகள் தொடர்பாக வழக்குகள் ஐகோர்ட்டில் உள்ளதால் சட்டச்சிக்கல் ஏற்படும் என்பதால் மெரினா கடற்கரையில் இடம் வழங்க முடியாது என அரசு தெரிவித்தது. அரசின் முடிவை எதிர்த்து, சென்னை ஐகோர்ட்டில் திமுக முறையிட்டது. இந்த வழக்கு விசாரணையின் போது,  ஜெயலலிதா நினைவிடத்துக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்குகள் அனைத்தும் வாபஸ் பெறப்பட்டன. இதையடுத்து, கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய அனுமதிக்குமாறு அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது. 

இதற்கிடையே, மெரினா கடற்கரையில் ஜெயலலிதா நினைவிடம் அமைப்பதற்கு  எதிரான வழக்கை தான் வாபஸ் பெறவில்லை என கூறிய சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர இருப்பதாகவும் அண்மையில் பேட்டி அளித்து இருந்தார். 

இந்த நிலையில், ஜெயலலிதா நினைவிடம் தொடர்பான மனு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து  டிராபிக் ராமசாமி, ஐகோர்ட் தலைமை நீதிபதியிடம் முறையிட்டுள்ளார்.  தனது கருத்தை கேட்காமல் தவறாக புரிந்து கொண்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டதாக டிராபிக் ராமசாமி தலைமை நீதிபதியிடம் கூறினார். இதையடுத்து, கோரிக்கை தொடர்பாக பதிவாளரை அணுக டிராபிக் ராமசாமிக்கு  உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அறிவுறுத்தினார். 

மேலும் செய்திகள்