அமைச்சர் விஜயபாஸ்கர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து சி.பி.ஐ. விசாரணை டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்

அமைச்சர் விஜயபாஸ்கர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு ஆணையிட டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Update: 2018-09-01 20:25 GMT
சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஊழல்கள் மூலம் கோடிக்கணக்கில் சொத்துக் குவித்தது குறித்தும், இயற்கை வளக் கொள்ளையில் ஈடுபட்டது குறித்தும் ஆதாரங்களுடன் வருமான வரித்துறை புகார் அளித்தும் அப்புகார்கள் மீது தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஊழல் அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்காமல் அவரைக் காப்பாற்ற முதல்-அமைச்சர் துடிப்பது கண்டிக்கத்தக்கது.

தமிழ்நாட்டில் ஊழலை ஒழிப்பதற்கான லோக் ஆயுக்தா அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு எச்சரித்த பிறகும், அதற்கான சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகும்கூட அந்த அமைப்பை அ.தி.மு.க. அரசு ஏற்படுத்தவில்லை. அத்தகைய அமைப்பு ஏற்படுத்தப்பட்டால் எடப்பாடி பழனிசாமி, விஜயபாஸ்கர் உள்ளிட்ட ஒட்டுமொத்த அமைச்சரவையும் உள்ளே செல்ல வேண்டியிருக்கும் என்ற அச்சம் காரணமாகவே லோக் ஆயுக்தா அமைப்பை ஏற்படுத்த அ.தி.மு.க. அரசு தயங்குகிறது. இதை அனுமதிக்க முடியாது.

அமைச்சர் விஜயபாஸ்கர் மீதான அனைத்து ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்தும் சி.பி.ஐ. விசாரணைக்கு ஆணையிட வேண்டும். விஜயபாஸ்கரை அமைச்சர் பதவியில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதேபோல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மீது வந்துள்ள புகார்களை புறந்தள்ளாமல் உடனடியாக அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்ய வேண்டும் எனவும், இவ்விசாரணை நேர்மையானதாக நடைபெற உடனடியாக அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் எனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வற்புறுத்திக் கேட்டுக்கொள்கிறது” என்று கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்