மாநில செய்திகள்
துணைவேந்தர் தேர்வுக்குழு: பேராசிரியர் தங்கமுத்து நியமனம் ரத்து ஐகோர்ட்டு உத்தரவு

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கான தேடுதல் குழுவில் சிண்டிகேட் பிரதிநிதியாக பேராசிரியர் தங்கமுத்து நியமிக்கப்பட்டதை ரத்துசெய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
சென்னை,

மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தராக பதவிவகித்த செல்லதுரையின் நியமனத்தை சென்னை ஐகோர்ட்டு ரத்துசெய்தது. பல்கலைக்கழக சட்டவிதிகளை முறையாக பின்பற்றி தேர்வுக்குழு அமைத்து, புதிய துணைவேந்தரை 3 மாதங்களுக்குள் தேர்வு செய்ய வேண்டும் என்றும் ஐகோர்ட்டு கூறியிருந்தது.

இந்த உத்தரவு நகல் கிடைக்கும் முன்பாகவே கடந்த ஜூன் 16-ந்தேதி புதிய துணைவேந்தரை தேர்வு செய்வதற்கான சிண்டிகேட் பிரதிநிதியாக பேராசிரியர் தங்கமுத்து நியமிக்கப்பட்டார். இதை எதிர்த்து பல்கலைக்கழக முன்னாள் மாணவர் மகாலிங்கம் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

அதில், ‘ஐகோர்ட்டு தீர்ப்பு சென்றடையும் முன்பாகவே அவசரமாக சிண்டிகேட் அலுவல்சாரா உறுப்பினர்களின் அவசரக்கூட்டம் கூட்டப்பட்டு, புதிய துணைவேந்தரை தேர்வு செய்யும் கமிட்டிக்கு சிண்டிகேட் பிரதிநிதியாக பேராசிரியர் தங்கமுத்துவை நியமித்துள்ளனர். இந்த நியமனம் சட்டத்திற்கு புறம்பானது. இதன்மூலம் மீண்டும் துணைவேந்தர் தேர்வில் முறைகேடுகள் நடக்க வாய்ப்புள்ளது. எனவே பேராசிரியர் தங்கமுத்து நியமனத்தை ரத்துசெய்ய வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்ரமணியம் பிரசாத் ஆகியோர் கொண்ட டிவிசன் பெஞ்ச் விசாரித்தது. அப்போது மனுதாரர் சார்பில் வக்கீல் எஸ்.தங்கசிவன் ஆஜராகி வாதிட்டார். இந்த நியமனத்தில் முறைகேடு நடைபெறவில்லை என்று பல்கலைக்கழகம் தரப்பில் வாதிடப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

புதிய துணைவேந்தரை தேர்வு செய்வதற்கான தேடுதல்குழு உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கு 15 நாட்களுக்கு முன்பாகவே சிண்டிகேட் உறுப்பினர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். பின்னர் அந்த நியமனத்திற்கு தமிழக கவர்னரிடம் அனுமதி பெறவேண்டும் என்று விதிகள் உள்ளன.

இந்த நடைமுறைகளை பின்பற்றாமல் அவசரமாக புதிய துணைவேந்தர் தேடுதல் குழுவிற்கான சிண்டிகேட் பிரதிநிதியாக பேராசிரியர் தங்கமுத்து நியமிக்கப்பட்டுள்ளார். இவரது நியமனம் சட்டப்படி நடக்கவில்லை. அதனால், அவரது நியமனத்தை ரத்து செய்கிறோம். உரிய விதிகளை பின்பற்றி தேர்வுக்குழு உறுப்பினர்களை தேர்வு செய்ய வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.