சென்னை பல்கலைக்கழகத்தில் எம்.ஜி.ஆர். பெயரில் ரூ.5 கோடியில் சமூக வளர்ச்சி மையம்

சென்னை பல்கலைக்கழகத்தில் ரூ.5 கோடியில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு சமூக வளர்ச்சி ஆய்வு மையம் நிறுவப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

Update: 2018-09-07 23:30 GMT
சென்னை,

சென்னை பல்கலைக்கழகத்தின் 160-வது ஆண்டு நிறைவு விழா சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள நூற்றாண்டு விழா கலை அரங்கத்தில் நேற்று நடந்தது. விழாவுக்கு, தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கினார். துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சென்னை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பி.துரைசாமி வரவேற்புரை ஆற்றினார்.

விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
மாணவர்கள் படிக்கும்போது அவர்கள் கவனம் முழுவதும் படிப்பில் தான் இருக்க வேண்டும். ஆனால் சிலர் புத்தகம் தூக்கும் கையில் ஆயுதங்களை தூக்கிக் கொண்டு செல்வது மிகவும் வருத்தமாக உள்ளது. வன்முறையில் ஈடுபடும் செயலை மாணவர்கள் முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

எதிர்கால தலைமுறையினரும் பேசக்கூடிய வகையில் நீடித்த சீர்திருத்தங்களை கல்வித் துறையில் நடைமுறைப்படுத்த ஜெயலலிதாவின் அரசு உறுதி பூண்டுள்ளது. சென்னை பல்கலைக்கழகத்தில் அண்ணா பொது வாழ்வியல் மையம், திராவிட ஆய்வு மையம், இணைய தடயவியல் மற்றும் தகவல் பாதுகாப்பு மையம் ஆகியவை தமிழ்நாடு அரசின் நிதி உதவியுடன் அமைக்கப்பட்டது.

அந்த வகையில், இப்பல்கலைக் கழகத்தின் 160-ம் ஆண்டு விழா மற்றும் டாக்டர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா ஆகியவற்றினை குறிக்கும் வகையில் டாக்டர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு சமூக வளர்ச்சி ஆய்வு மையம் ரூ.5 கோடி செலவில் நிறுவப்படும். இந்த மையத்தின் மூலம் டாக்டர் எம்.ஜி.ஆரின் முன்னோடி திட்டங்களான சத்துணவு திட்டம் மற்றும் கல்வி, சுகாதாரம், மகளிர் வளர்ச்சி தொடர்பான திட்டங்கள் குறித்து கற்பித்தல், ஆராய்ச்சி மற்றும் விரிவு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

சென்னை பல்கலைக்கழகத்தில் உள்ள நூலக கட்டிடம், மணிக்கூண்டு கட்டிடம், ஓரியண்டல் கல்வி நிறுவன கட்டிடம் மற்றும் நூற்றாண்டு கட்டிடம் ஆகிய புராதன கட்டிடங்களை தொன்மையை பாதுகாத்து பழுது பார்த்தல், புதுப்பித்தல் ஆகிய பணிகளுக்காக தமிழ்நாடு அரசால் ரூ.5 கோடி நிதி வழங்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-
பல வளர்ச்சி குறியீடுகளில் இன்றைக்கு தமிழகம் இந்தியாவின் முன்னணி மாநிலமாக திகழ்கிறது. இந்த வளர்ச்சி நீடித்து நிலை பெறவும், அனைத்து துறைகளிலும் தமிழகம் முதன்மை பெற்று நாளைய சமுதாயம் வளம் பெறவும் நமது பல்கலைக்கழகங்கள் மாணவர்களை செயல்திறன் மிக்கவர்களாக உருவாக்க வேண்டும்.

வாழ்க்கை முழுவதும், தொடர்ந்து அறிவை தேடும் ஊக்கத்தையும் திறனையும் அவர்கள் பெற்றிடும்வண்ணம் ஆசிரியர்கள் தங்கள் அறிவையும், திறமையும் செலுத்தி போதிக்க வேண்டும். பல்கலைக்கழகங்கள் மேற்கொள்ளும் இந்த சீரிய பணிக்காக ஜெயலலிதா அரசு தொடர்ந்து அனைத்து உதவிகளையும் செய்து கொடுக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் முன்னதாக பல்கலைக்கழகத்தின் பல்வேறு துறைகளை சேர்ந்தவர்களுக்கு சிறந்த ஆராய்ச்சியாளர் விருது, சிறந்த நிர்வாக அலுவலர் விருது மற்றும் மாணவர்களுக்கு நாட்டு நலப்பணி திட்ட விருது, விளையாட்டு விருது உள்ளிட்டவற்றை எடப்பாடி பழனிசாமி வழங்கி கவுரவித்தார். மேலும் கட்டுரைப்போட்டி, பேச்சுப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் அவர் பரிசுகள் வழங்கினார்.

ஆசிய போட்டியில் பதக்கங்கள் பெற்று சாதனை படைத்த சுனய்னா சாரா குருவில்லா(ஸ்குவாஷ்), வர்ஷா கவுதம்(பாய்மர படகு) ஆகிய மாணவிகளும் விழாவில் கவுரவிக்கப்பட்டனர். எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு சென்னை பல்கலைக்கழகத்தின் 160-வது ஆண்டு நினைவுப் பரிசை பல்கலைக்கழக துணைவேந்தர் பி.துரைசாமி வழங்கினார்.

முடிவில் சென்னை பல்கலைக்கழகத்தின் பதிவாளர் சீனிவாசன் நன்றி கூறினார். விழாவில், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், உயர் கல்வித்துறை முதன்மை செயலாளர் மங்கத் ராம் ஷர்மா, அமைச்சர்கள் பாலகிருஷ்ண ரெட்டி, மணிகண்டன் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

விழா தொடங்குவதற்கு முன்னதாக பல்கலைக்கழகத்தை சேர்ந்த அம்பேத்கர் வாசகர் வட்டத்தை சேர்ந்த மாணவ-மாணவிகள் சிலர், ‘கேன்டீனை திறக்க வேண்டும். சுகாதாரமான குடிநீர் வழங்க வேண்டும்’ என்ற கோரிக்கைகளுடன் பல்கலைக்கழக வளாகத்தில் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் போலீசார் அவர்களை கைது செய்து அழைத்து சென்றனர்.

மேலும் செய்திகள்