மாநில செய்திகள்
உலக தமிழ் அறக்கட்டளை சார்பில் அமெரிக்காவில் கருணாநிதிக்கு அஞ்சலி

உலக தமிழ் அறக்கட்டளை சார்பில் அமெரிக்காவில் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.
வாஷிங்டன், உலக தமிழுறவு மன்ற ஒருங்கிணைப்பாளர் கவிஞர் வா.மு.சேதுராமன் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். உலக தமிழ் அறக்கட்டளை மற்றும் வாஷிங்டன் தமிழ் சங்கம் உள்ளிட்ட தமிழ் அமைப்புகளின் சார்பில் மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி, ‘கருணாநிதிக்கு நினைவேந்தல் – வீரவணக்க புகழ்மாலை கூட்டம்’ எனும் தலைப்பில் அமெரிக்காவில் உள்ள வாஷிங்டன் நூலகத்தில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி உருவப்படத்தை பன்னாட்டு தமிழுறவு மன்ற ஒருங்கிணைப்பாளர் கவிஞர் வா.மு.சேதுராமன் திறந்து வைத்தார். அப்போது கருணாநிதியுடனான தனது அனுபவங்களை பகிர்ந்துகொண்டார்.நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:– ‘தமிழின உரிமை பாதுகாப்பின் கவசமாக திகழ்ந்தவர், கருணாநிதி. போராட்டமே தன் வாழ்வென்று ஆன போதும் அடித்தட்டு மக்களின் வாழ்க்கை மேம்பட வாழ்நாள் முழுவதையும் தியாகம் செய்தவர். பொல்லாங்குகள் வந்தபோது அதை பொறுமையாக வென்றார். அவரது மறைவு தமிழ் சமூகத்துக்கு மிகப்பெரிய இழப்பு. சிறப்புக்குரிய கருணாநிதி மறைவுக்கு அமெரிக்க பாராளுமன்றமே இரங்கல் செலுத்தி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.கருணாநிதி நினைவேந்தல் நிகழ்ச்சியில் உலக தமிழ் அறக்கட்டளை நிறுவன தலைவர் தமிழ்மணிகண்டனார், வட அமெரிக்க தமிழ் சங்கத்தின் முன்னாள் ஒருங்கிணைப்பாளர் நாஞ்சில் பீட்டர், முன்னாள் தலைவர் பாலகன் ஆறுமுகசாமி, வாஷிங்டன் தமிழ்ச்சங்கத்தின் முன்னாள் தலைவர் ஐசக், துணைத்தலைவர் ராமசாமி மற்றும் பாலுசீனி, முருகவேல், பிரபு உள்ளிட்ட தமிழ் அறிஞர்கள், ஆர்வலர்கள் பங்கேற்றனர்.