ஊதிய உயர்வு கோரி சென்னையில், அரசு டாக்டர்கள் ஆர்ப்பாட்டம்

ஊதிய உயர்வு கோரி சென்னையில், அரசு டாக்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-09-12 20:30 GMT
சென்னை, 

ஊதிய உயர்வு கோரி சென்னையில், அரசு டாக்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதிய உயர்வு வழங்கவேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழக அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை அருகே நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் டாக்டர்கள் செந்தில், லட்சுமி நரசிம்மன், பெருமாள்பிள்ளை உள்ளிட்டோர் தலைமையில் ஏராளமானோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டம் குறித்து டாக்டர்கள் செந்தில், லட்சுமி நரசிம்மன், பெருமாள்பிள்ளை ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:-

ரெயில்வே ஆஸ்பத்திரி, ஈ.எஸ்.ஐ. உள்ளிட்ட மத்திய அரசு ஆஸ்பத்திரிகளில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் தரக்கோரி தமிழக அரசு மருத்துவர்கள் 10 ஆண்டு காலமாக போராடி வருகிறார்கள். மருத்துவர்களுக்கு 4, 9, 13, 20 என ஆண்டுகள் அடிப்படையில் ஊதிய உயர்வு வழங்கப்பட்டு வருகிறது.

இதில் 13 வருடங்கள் என்பது மிகவும் முக்கியமான காலமாகும். ஆனால் 13 ஆண்டுகள் ஊதிய உயர்வு மத்திய அரசு மருத்துவர்களுக்கு மட்டுமே சாத்தியமாகிறது. இது எங்களுக்கு பெரும்பாலும் அளிக்கப்படுவது கிடையாது. இதனால் ஊதிய உயர்வு திட்டமான ‘பே பாண்டு-4’-ல் எங்களால் இணையமுடிவதில்லை. இதனால் ஒவ்வொரு மாதமும் எங்களின் நியாயமான சம்பளத்தை ரூ.40 ஆயிரம் வரை இழக்கிறோம்.

20 ஆண்டுகள் கழித்து எங்களுக்கு வழங்கப்படும் ஊதிய உயர்வு பயனற்றதாகும். எனவே எங்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு மதிப்பளித்து, மத்திய அரசு டாக்டர்களுக்கு இணையான ஊதியத்தை எங்களுக்கு வழங்கவேண்டும். அதை வலியுறுத்தி வருகிற 21-ந்தேதி தமிழகம் முழுவதும் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட இருக்கிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோட்டை நோக்கி பேரணி செல்ல முயன்றனர். பின்னர் போலீசார் கேட்டுக்கொண்டதற்கேற்ப 15 பேர் மட்டும் கோட்டைக்கு சென்று, முதல்-அமைச்சர் தனிப்பிரிவு அதிகாரிகளிடம் மனு அளித்தனர்.

மேலும் செய்திகள்