செங்கோட்டையில் பதற்றம்: விநாயகர் சிலை ஊர்வலத்தில் மோதல் 20 கார்கள் உடைப்பு-போலீசார் குவிப்பு

செங்கோட்டையில் விநாயகர் சிலை ஊர்வலத்தில் மோதல் ஏற்பட்டது. 20 கார்கள், மோட்டார் சைக்கிள்கள் அடித்து நொறுக்கப்பட்டதால் பதற்றம் நிலவுகிறது.

Update: 2018-09-13 22:16 GMT
செங்கோட்டை,

செங்கோட்டையில் விநாயகர் சிலை ஊர்வலத்தில் மோதல் ஏற்பட்டது. 20 கார்கள், மோட்டார் சைக்கிள்கள் அடித்து நொறுக்கப்பட்டதால் பதற்றம் நிலவுகிறது. இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.

விநாயகர் சதுர்த்தியையொட்டி நெல்லை மாவட்டம் செங்கோட்டை சுற்றுவட்டார பகுதியில் ஏராளமான விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு உள்ளன. நேற்று இரவில் செங்கோட்டை மேலூர் பகுதியில் வீர விநாயகர் சிலை உள்ளிட்ட சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, ஓம்காளி திடலுக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.

அந்த சிலைகள் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினர் வசிக்கும் பகுதி வழியாக செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. இதற்கு அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் இருதரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அந்த பகுதியில் பாதுகாப்புக்கு நின்ற போலீசார் இருதரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அந்த சமயத்தில் விநாயகர் சிலை மீது கற்கள் வீசப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் இருதரப்புக்கும் இடையே மோதல் உருவானது. அவர்கள் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர்.

மேலும் அந்த பகுதியில் நிறுத்தப்பட்டு இருந்த 20-க்கும் மேற்பட்ட கார்கள், மோட்டார் சைக்கிள்கள், கடைகள், ஏ.டி.எம். மைய முன் பகுதி அடித்து நொறுக்கப்பட்டது.

இருதரப்பினர் மோதல் குறித்து உடனடியாக செங்கோட்டை போலீசுக்கும், மாவட்ட போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மேலும், போலீசார் இருதரப்பினரையும் கலைந்து செல்ல அறிவுறுத்தினார்கள். அதன்படி அவர்கள் கலைந்து சென்றனர்.

இருந்தபோதும், அங்கு பதற்றம் நீடிப்பதால் ஏராளமான போலீசார் அந்த பகுதியில் குவிக்கப்பட்டனர். அவர்கள் ரோந்து சென்று அசம்பாவிதம் ஏதும் ஏற்படாத வகையில் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்