மணப்பெண்ணின் தங்கையை படம் எடுத்ததால் கறிவிருந்தில் ஏற்பட்ட தகராறில் தொழிலாளி கொலை 6 பேர் கைது

சென்னையை சேர்ந்த மணப்பெண்ணின் தங்கையை செல்போனில் படம் எடுத்தவர்களை தட்டிக்கேட்டதால் ஏற்பட்ட தகராறில் தொழிலாளி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2018-09-13 22:25 GMT
விருதுநகர், 

விருதுநகர் மாவட்டம் எஸ்.கல்விமடை கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்வேல். இவருக்கும், சென்னையை சேர்ந்த ஈஸ்வரிக்கும் நேற்று முன்தினம் பிள்ளையார்குளத்தில் திருமணம் நடைபெற்றது.

திருமணம் முடிந்து பிள்ளையார்குளத்தில் உள்ள ஈஸ்வரியின் தாய்மாமனான தொழிலாளி முருகவேல் (வயது 45) வீட்டில் கறி விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தனர். அங்கு புதுமண தம்பதியர் சென்றனர்.

மணப்பெண் ஈஸ்வரியுடன் வந்திருந்த அவரது தங்கையை, 6 பேர் சேர்ந்து செல்போனில் படம் பிடித்தனர். இதற்கு முருகவேல் எதிர்ப்பு தெரிவித்ததால் கறி விருந்தில் தகராறு ஏற்பட்டது. படம் எடுத்தவர்களுக்கும், முருகவேலுக்கும் மோதலானது. அங்கிருந்தவர்கள் அவர்களை சமாதானம் செய்து அனுப்பினர்.

பின்னர் படம் எடுத்த அந்த கும்பலை சேர்ந்தவர்கள், நள்ளிரவு முருகவேல் வீட்டிற்குள் புகுந்து அவரை கல், கம்பால் மூர்க்கத்தனமாக தாக்கிவிட்டு தப்பி சென்றனர். இதில் பலத்த காயம் அடைந்த முருகவேலை அக்கம்பக்கத்தினர் மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே இறந்து விட்டார்.

இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி பிள்ளையார்குளத்தை சேர்ந்த ஆறுமுகம், செல்வகுமார், சங்கர், கோபி, முத்து, மதுரை மேலூர் பகுதியை சேர்ந்த அஜித்சுந்தர் ஆகியோரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்