கொசு மருந்தை குடித்த நடிகை நிலானி மீது தற்கொலை முயற்சி வழக்கு

கொசு மருந்தை குடித்த சின்னத்திரை நடிகை நிலானி மீது, மதுரவாயல் போலீசார் தற்கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து உள்ளனர்.

Update: 2018-09-22 23:30 GMT
பூந்தமல்லி,

மதுரவாயலை அடுத்த அஷ்டலட்சுமி நகர், 2-வது மெயின் ரோட்டில் உள்ள வாடகை வீட்டில் வசித்து வருபவர் சின்னத்திரை நடிகை நிலானி. கணவரை விட்டு பிரிந்து தனது 2 பிள்ளைகளுடன் தனியாக வாழ்ந்து வருகிறார்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது போலீஸ் சீருடையில், போலீசுக்கு எதிராக சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறி கைதாகி, ஜாமீனில் வெளியே வந்தார். தொடர்ந்து டி.வி. தொடர்களில் நடித்து வருகிறார்.

இதற்கிடையில், தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி தொல்லை கொடுப்பதாக அவருடைய காதலன் காந்தி லலித்குமார் மீது போலீசில் நிலானி புகார் செய்தார். இதனால் மனம் உடைந்த காந்தி லலித்குமார், தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

காந்தி லலித்குமார் சாவுக்கு நிலானியே காரணம் என அவரது உறவினர்கள் புகார் தெரிவித்தனர். இதையடுத்து சென்னை கமிஷனர் அலுவலகம் சென்ற நிலானி, காந்தி லலித்குமார் சாவுக்கு தான் காரணம் இல்லை என புகார் மனு அளித்தார்.

இந்த நிலையில் கடந்த 20-ந் தேதி நிலானி, தனது வீட்டில் கொசு மருந்தை குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். உடனடியாக அவரை மீட்ட போலீசார், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை முடிந்து அன்று இரவே வீட்டுக்கு திரும்பிய நிலானி, அதன்பிறகு தனது பிள்ளைகளுடன் எங்கோ சென்று விட்டார். அவரது வீடு பூட்டி கிடக்கிறது. அவர் எங்கு சென்றார்? என தெரியவில்லை.

இதற்கிடையில் மதுரவாயல் போலீசார், நிலானி மீது தற்கொலைக்கு முயற்சி செய்ததாக வழக்கு பதிவு செய்து உள்ளனர்.

மேலும் செய்திகள்