அ.தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளராக தலைமைச் செயலாளர் மாறி இருக்கிறார் மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு

அ.தி.மு.க.வின் கொள்கை பரப்பு செயலாளராக தலைமைச் செயலாளர் மாறியிருக்கிறார் என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.

Update: 2018-10-08 23:30 GMT
சென்னை,

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தில் கோடிக்கணக்கில் ஊழல் நடந்துள்ளதாக தமிழக கவர்னர் நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருக்கிறாரே?.

பதில்:- பல்கலைக்கழகத்தில் மட்டுமல்ல, தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் இந்த அ.தி.மு.க. ஆட்சியில் எல்லாத்துறைகளிலுமே ஊழல் தலைவிரித்தாடிக் கொண்டிருக்கிறது. இதுகுறித்து நாங்கள் ஏற்கனவே தமிழக கவர்னரிடம் பலமுறை மனுக்கள் தந்திருக்கிறோம். உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரியிருக்கிறோம். அதையும் தாண்டி, நீதிமன்றத்திற்குச் சென்று இது தொடர்பாக வழக்கும் தொடுத்திருக்கின்றோம். வழக்கு நிலுவையில் இருந்து கொண்டிருக்கிறது.

விசாரணை தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதற்கிடையில், ஏற்கனவே நாங்கள் தமிழக கவர்னரை சந்தித்த நேரத்தில், பல்கலைக்கழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கக்கூடிய பல்வேறு முறைகேடுகள், ஊழல்கள் குறித்து பல மனுக்களை தந்திருக்கின்றோம். ஆனால், அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

தற்போது கவர்னரே சென்னையில் நடைபெற்ற ஒரு பொது நிகழ்ச்சியிலேயே, பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தில் பல கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றுள்ளது என்று பேசியிருப்பது வேடிக்கையை அல்ல, வேதனையைத் தருகிறது. எனவே, இது குறித்து கவர்னரை நேரில் சந்தித்து முறையிட நேரம் ஒதுக்கித் தருமாறு, நாங்கள் கேட்டிருக்கிறோம். நேரம் ஒதுக்கித் தந்த பிறகு, அதனை வலியுறுத்த இருக்கிறோம்.

கேள்வி:- மழையை காரணம் காட்டி திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல்களை ஒத்தி வைத்திருக்கிறார்களே, இது ஏற்கக்கூடியதா?

பதில்:- இவ்விரு தொகுதிகளில் நடைபெற உள்ள இடைத்தேர்தலை சந்திப்பதற்கு ஆளுங் கட்சியாக இருக்கக்கூடிய அ.தி.மு.க. எந்தளவிற்கு பயந்திருக்கிறது என்பதற்கு இதைவிட வேறு சாட்சி, சான்று தேவையில்லை. தலைமைச் செயலாளர், அ.தி.மு.க.வின் கொள்கை பரப்பு செயலாளராக மாறி, அவரே தேர்தல் ஆணையத்திற்கு அறிக்கை தந்திருக்கிறார் என்பதும் வெட்டவெளிச்சமாகி இருக்கிறது.

இவ்வாறு அவர் பதில் அளித்தார்.

மேலும் செய்திகள்