உலக முதலீட்டாளர்கள் மாநாடு “தமிழ்நாட்டில் தொழில்வளம் மேலும் பெருகும்” எடப்பாடி பழனிசாமி உறுதி

உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்துவதன் மூலம் தமிழ்நாட்டில் தொழில்வளம் மேலும் பெருகும் என்பது உறுதி என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

Update: 2018-10-10 21:31 GMT
சென்னை,

இந்திய தொழில் கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு அரசும் இணைந்து நடத்திய ‘கனெக்ட்-2018’ மாநாட்டின் நிறைவு விழா சென்னையை அடுத்த மணப்பாக்கத்தில் உள்ள ஓட்டலில் நேற்று நடைபெற்றது. விழாவில் இந்திய தொழில் கூட்டமைப்பு தென்மண்டல துணை தலைவர் சஞ்சய் ஜெயவர்தனவேலு வரவேற்புரையாற்றினார். முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்பு விருந்தினராக பங்கு பெற்றார்.

இதில் அமைச்சர்கள் எம்.சி.சம்பத், இரா.காமராஜ், டாக்டர் எம்.மணிகண்டன், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தின் முதலாவது தலைமை செயல் அதிகாரி எப்.சி.கோலி, இந்திய தொழில் கூட்டமைப்பு மாநாட்டின் தலைவர் கிருஷ்ணகுமார் நடராஜன், தகவல் தொழில்நுட்ப துறை செயலாளர் சந்தோஷ் பாபு, இந்திய தொழில் கூட்டமைப்பின் மாநில கவுன்சில் தலைவர் எம்.பொன்னுசாமி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

புத்தகம் வெளியீடு

விழாவில், ‘தமிழ்நாட்டின் மின் ஆளுமை’ என்ற புத்தகத்தை, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். அதைத்தொடர்ந்து உணவு பொருள் வழங்கல் துறையில் மின் ஆளுமை திட்டத்தை சிறந்த முறையில் செயல்படுத்தியதற்காக உணவுத்துறை அமைச்சர் காமராஜூக்கு மின் ஆளுமை விருதினையும், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தின் முதலாவது தலைமை செயல் அதிகாரி எப்.சி.கோலிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதினையும் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

இதையடுத்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

உலக முதலீட்டாளர்கள் மாநாடு

2015-ம் ஆண்டு நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாடு வெற்றிகரமாக நடைபெற இந்திய தொழில் கூட்டமைப்பு பேருதவியாக இருந்தது. அதே போன்று, வரும் 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கும், தமிழ்நாடு அரசுக்கு பேருதவியாக இருக்க வேண்டும் என்று இந்திய தொழில் கூட்டமைப்பு செயல்பட்டு கொண்டு இருக்கிறது என்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி.

நவீன தொழில்நுட்ப தேவைகளை நிறைவேற்றுகின்ற அளவிற்கு மனிதவள ஆற்றல் கொண்ட மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. இங்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மாணவர்கள் என்ஜினீயரிங் கல்லூரிகளில் தங்களது கல்வியினை முடித்துவிட்டு திறமைமிக்க என்ஜினீயர்களாக வெளிவருகின்றனர்.

அரசின் விருப்பம்

அவ்வாறு படிப்பை முடித்து வெளிவரும் என்ஜினீயர்கள், வெளிநாட்டில் மட்டுமன்றி, தமிழ்நாட்டில் உள்ள தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் வகையில், அவர்களது செயல்திறனை மேம்படுத்தவேண்டும் என்பது ஜெயலலிதா அரசின் விருப்பம் ஆகும். அதனை நிறைவேற்றும் பொருட்டு, என்ஜினீயரிங் பட்டதாரிகளுக்கான செயல்திறன் மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பு மேம்படுத்துதல் கலந்தாய்வு கூட்டம் ஒன்று என்னால் நடத்தப்பட்டது.

தமிழ்நாட்டின் மென்பொருள் ஏற்றுமதி 2017-18-ம் ஆண்டு ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 179 கோடி ரூபாயாக இருக்கும் எனவும், மென்பொருள் வல்லுநர்களின் எண்ணிக்கை 6 லட்சத்து 38 ஆயிரமாக இருக்கும் எனவும் மதிப்பிடப்பட்டு உள்ளது.

தற்பொழுது அளிக்கப்பட்டு வரும் திறன்மேம்பாட்டு பயிற்சியின் மூலம் தமிழ்நாட்டின் மென்பொருள் ஏற்றுமதியும், திறன்வாய்ந்த மென்பொருள் வல்லுநர்களின் எண்ணிக்கையும் பல மடங்கு பெருகும்.

தொழில்வளம் மேலும் பெருகும்

தமிழ்நாட்டில் தொழில் தொடங்கிட, ஏற்கனவே உள்ள உகந்த சூழ்நிலையை மேலும் எளிமைப்படுத்தும் வகையில் தொழில் நிறுவனங்களுக்கு தேவையான ஒப்புதல் மற்றும் உரிமங்கள் ஆகியவற்றை ஒரே விண்ணப்பத்தின் மூலம் ஆன்-லைனில் பெறுவதற்கு “ஒருங்கிணைந்த இணையதளவழி ஒற்றைச்சாளர தகவு” ஒன்று ஜெயலலிதாவின் அரசால் தொடங்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் 11 அரசுத்துறைகளில் இருந்து தேவையான பல்வேறு அனுமதிகள் பெறுதல் மற்றும் புதுப்பித்தல் ஆகிய சேவைகளை தொழில்நிறுவனங்கள் எளிதாக பெறஇயலும்.

தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சியை மேலும் அதிகரிக்க வரும் ஜனவரி மாதம் 2-வது உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாடு நடைபெறுவதன் மூலம் பல சர்வதேச நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழில்முதலீடுகள் செய்ய முன்வருவார்கள் என உறுதியாக நம்புகிறேன். இதன்மூலம் தமிழ்நாட்டில் தொழில்வளம் மேலும் பெருகும் என்பது உறுதி.

மணல் இறக்குமதி

இச்சமயத்தில், உங்களுடன் ஒரு தகவலை மகிழ்ச்சியுடன் பரிமாறிக்கொள்ள விரும்புகின்றேன். ஆற்று மணலுக்கு மாறாக வெளிநாட்டில் இருந்து மணலை இறக்குமதி செய்து விற்பனை செய்யப்படும் என்று அறிவித்து நான் எடுத்த நடவடிக்கையின் மூலமாக, இன்றையதினம் சென்னை எண்ணூர் துறைமுகத்தில் முதல்கப்பல் வந்துள்ளது என்ற மகிழ்ச்சியான செய்தியை தெரிவித்து, தற்போது மணல் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

பல சோதனைகளைக் கடந்து வெற்றிகரமாக இன்று இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இல்லம் தேடிவரும் திட்டத்தின் மூலம், மணல் அவரவர் தேவைக்கேற்ப வீட்டிற்கு சப்ளை செய்யப்படும். தமிழ்நாட்டில் தொழில் முனைவோர்கள் ஏற்றுமதி, இறக்குமதி செய்வதற்கு வசதியாக, துறைமுகத்திற்கான அணுகு சாலைவசதி மேம்படுத்தப்பட்டு வருகிறது, வேண்டிய அளவு மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. இவற்றுக்கான பல வசதிகளை நான் உங்களுக்கு செய்வதற்கு தயாராக உள்ளேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்