தாமிரபரணி மகா புஷ்கர விழா தொடங்கியது கவர்னர்-பக்தர்கள் புனித நீராடினர்

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் தாமிரபரணி மகா புஷ்கர விழா தொடங்கியது.

Update: 2018-10-11 23:30 GMT
நெல்லை,

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் வற்றாத ஜீவநதியாக பாய்ந்தோடி வளம் கொழிக்க செய்யும் தாமிரபரணி ஆற்றில் 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகா புஷ்கர விழா நடைபெறுகிறது. அதாவது தாமிரபரணி ஆற்றின் ராசியான விருச்சிக ராசிக்கு குருபகவான் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பெயர்ச்சி அடைவது புஷ்கர விழாவாக கொண்டாடப்படுகிறது. தற்போது 144 ஆண்டுகளுக்கு பிறகு வரும் புஷ்கர விழா என்பதால் மகா புஷ்கர விழாவாக கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள 143 படித்துறைகளிலும், 60-க்கும் மேற்பட்ட தீர்த்தக்கட்டங்களிலும் புஷ்கர விழாவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

தாமிரபரணி மகா புஷ்கரத்தின் தொடக்க விழா நேற்று காலை பாபநாசத்தில் நடந்தது. இதில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் கலந்துகொண்டு தாமிரபரணியில் புனித நீராடினார். பின்னர் பக்தர்கள் நீராடினர். இதைத்தொடர்ந்து அங்குள்ள ஒரு மண்டபத்தில் நடந்த அகில பாரத துறவிகள் சங்க மாநாட்டில் கவர்னர் கலந்துகொண்டு, தாமிரபரணி புஷ்கர விழாவை தொடங்கிவைத்தார்.

மாநாட்டில், மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், இமாசலபிரதேச முன்னாள் கவர்னர் விஷ்ணு சதாசிவ கோக்ஜே உள்பட பலர் கலந்துகொண்டனர். புஷ்கர விழாவையொட்டி, தாமிரபரணி ஆற்றில் பொதுமக்கள் தங்களுக்கு விருப்பமான இடங்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து புனித நீராடினர்.

பாபநாசத்தில் உள்ள பாபநாச சுவாமி கோவில் படித்துறையில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடி தங்களுடைய முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். மேலும் ஏராளமான துறவிகளும், சாமியார்களும் புனித நீராடினர். வெளிமாநிலம் மற்றும் வெளிநாட்டில் இருந்தும் ஏராளமானவர்கள் வந்து இருந்தனர்.

இதேபோல், அம்பை, கல்லிடைக்குறிச்சி, சேரன்மாதேவி, நெல்லை குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோவில் படித்துறை, ஸ்ரீவைகுண்டம் உள்ளிட்ட இடங்களில் தாமிரபரணி புஷ்கர விழா கொண்டாடப்பட்டது. இந்த படித்துறைகளில் காலையில் இருந்தே ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர். மாலையில் தாமிரபரணி மகா ஆரத்தி நடந்தது.

பாபநாசத்தில் சித்தர் கோட்டத்தின் சார்பில் புஷ்கர விழாவையொட்டி சித்தர்கள் மரஉறி உடை அணிந்து பாபநாசம் தலையணையில் இருந்து யானை, குதிரை, பசுமாடுகள் மீது புனிதநீர் எடுத்து வந்தனர். அப்போது பக்தர்களும் புனிதநீர் எடுத்து மேள தாளம் முழங்க ஊர்வலமாக வந்தனர். இதில் அகோரிகள், சிவனடியார்கள் கலந்துகொண்டனர்.

இதற்கிடையே, கவர்னர் பன்வாரிலால் புரோகித் நெல்லை அருகன்குளம் எட்டெழுத்து பெருமாள் கோவில் கோசாலை, ஜடாயு துறை ஆகிய இடங்களுக்கு சென்றார். பின்னர் ஜடாயு துறை படித்துறையில் நடந்த தாமிரபரணி மகா புஷ்கர ஆரத்தி பூஜையை அவர் தொடங்கிவைத்தார்.

பின்னர் வீரவநல்லூர் அருகே உள்ள திருப்புடைமருதூரில் தாமிரபரணி ஆற்றில் காஞ்சி சங்கர மடம் சார்பில் நடைபெற்ற மகா புஷ்கர விழாவில் அவர் கலந்துகொண்டார்.

புஷ்கர விழாவையொட்டி, நெல்லை மாவட்டம் முழுவதும் 7 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். மகா புஷ்கர விழா வருகிற 23-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) வரை நடைபெறுகிறது. இதையொட்டி நெல்லைக்கு சிறப்பு ரெயில்களும், பஸ்களும் இயக்கப்பட்டு வருகின்றன.

மேலும் செய்திகள்