ஊழலை ஒழிக்க பொதுச்சேவை உரிமைச் சட்டம் வேண்டும் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்

பொதுச்சேவை உரிமைச் சட்டத்தை தமிழக அரசு கொண்டு வர வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

Update: 2018-10-12 20:34 GMT
சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஊழலை ஒழிக்கும் நோக்கத்துடன் செயல்பட்டு வரும் ஒரு தனியார் அமைப்பு தமிழ்நாடு உள்ளிட்ட 215 மாவட்டங்களில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரிடம் ஆய்வு நடத்தியது. அவற்றின் அடிப்படையில் தொகுக்கப்பட்ட ஊழல் அதிகமுள்ள மாநிலங்கள் பட்டியலில் உத்தரப்பிரதேசம் முதலிடத்தையும், பஞ்சாப் இரண்டாவது இடத்தையும், தமிழகம் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. தமிழகத்திலிருந்து இதில் பங்கேற்றவர்களில் 52 சதவீதபேர் அரசு சேவையைப் பெற லஞ்சம் தர வேண்டியிருந்ததாக கூறியுள்ளனர்.

பத்திரப்பதிவுத்துறையில் அதிக ஊழல் நடப்பதாக தெரியவந்துள்ளது. காவல்துறை, உள்ளாட்சித்துறை, மின்துறை, போக்குவரத்துத்துறை, வரி செலுத்தும் துறை ஆகியவற்றில் ஊழல் நடப்பதாகவும் ஆய்வில் தெரியவந்திருக்கிறது. இந்த தகவல்கள் அனைத்தும் உண்மை என்பதில் யாருக்கும், எந்த சந்தேகமும் தேவையில்லை. தமிழகத்தில் அனைத்துத் துறைகளிலும் ஊழல் நிலவுவதை அத்துறையை அணுகியவர்கள் உணர்ந்திருப்பார்கள்.

பொதுச்சேவை

அரசு நிர்வாகத்தில் ஊழலை ஒழிக்க ஒரே வழி பொதுச்சேவை பெறும் உரிமைச்சட்டத்தை இயற்றி செயல்படுத்துவது தான். அதனால் தான் தமிழகத்தில் பொதுச்சேவை பெறும் உரிமைச் சட்டத்தை கொண்டு வர வேண்டும் என கடந்த 6 ஆண்டுகளாக பா.ம.க. வலியுறுத்தி வருகிறது.

சாதிச்சான்று, பிறப்புச் சான்று, இறப்புச் சான்று, திருமண பதிவுச் சான்று, வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, நில ஆவணங்களின் நகல்கள் உள்பட பல்வேறு சேவைகளை இந்த சட்டத்தின் மூலம் பெற முடியும். மேலும் தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புக்காக ரூ.5 ஆயிரம் வரை இழப்பீடு பெற முடியும்.

ஆனால், அரசு நிர்வாகத்தில் ஊழல் தொடர வேண்டும் என்பதற்காகவே இச்சட்டத்தை கொண்டு வர தமிழக ஆட்சியாளர்கள் மறுக்கின்றனர். தமிழ்நாட்டில் இனியும் இத்தகைய சூழல் நிலவுவதை அனுமதிக்க முடியாது. எனவே, நிர்வாகத்தில் ஊழலை ஒழிக்கும் வகையில் பொதுச்சேவை உரிமைச் சட்டத்தை தமிழக அரசு கொண்டு வர வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்