குட்கா ஊழல் வழக்கில் சி.பி.ஐ. விசாரணை பட்டியலில் 20 போலீஸ் அதிகாரிகள்

குட்கா ஊழல் வழக்கில் மேலும் 20 போலீஸ் அதிகாரிகள் சி.பி.ஐ. போலீசாரின் விசாரணை பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

Update: 2018-10-12 21:04 GMT
சென்னை,

இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ரூ.40 கோடி குட்கா ஊழல் வழக்கை சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. இதில் குட்கா வியாபாரியும், தொழில் அதிபருமான மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா, கலால் வரித்துறை அதிகாரி பாண்டியன், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் செந்தில் முருகன், சிவக்குமார் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த ஊழல் தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், போலீஸ் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், சென்னை நகர முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ், மதுரை ரெயில்வே போலீஸ் சூப்பிரண்டு மன்னர் மன்னன் மற்றும் இன்ஸ்பெக்டர் சம்பத் ஆகியோரின் வீடுகள் உள்பட 35 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

சி.பி.ஐ. சம்மன்

குட்கா குடோனில் முதன்முதலாக சோதனை நடத்திய அதிகாரி என்பதாலும் ஜெயக்குமாரையும் சி.பி.ஐ. அதிகாரிகள் தங்கள் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்தனர். இதுதொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு ஜெயக்குமாருக்கு சம்மன் அனுப்பினர்.

அதன்படி நேற்று முன்தினம் அவர் சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் நேரில் ஆஜரானார். அவரிடம் சுமார் 7 மணி நேரம் சி.பி.ஐ. அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.

2-வது நாளாக விசாரணை

நேற்று 2-வது நாளாக சி.பி.ஐ. அலுவலகத்தில் போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் ஆஜரானார். காலை 10.30 மணிக்கு அவரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணையை தொடங்கினார்கள். மாலை 6.30 மணி வரை அவரிடம் விசாரணை நடந்தது. அவரிடம் ஏராளமான ஆவணங்களை காட்டி சி.பி.ஐ. அதிகாரிகள் விளக்கம் கேட்டதாக தெரிகிறது.

குட்கா லஞ்ச ஊழல் அரங்கேறிய காலக்கட்டத்தில் ஜெயக்குமார் சொத்துகள் ஏதாவது வாங்கினாரா? என்பது பற்றியும் கேள்விக்கணைகளை சி.பி.ஐ. அதிகாரிகள் தொடுத்தனர். சி.பி.ஐ. அதிகாரிகள் கேட்ட கேள்விகள் அனைத்துக்கும் ஜெயக்குமார் விரிவாக பதில் அளித்ததாக தெரிகிறது.

20 போலீஸ் அதிகாரிகள்

குட்கா ஊழல் வழக்கில் போலீஸ் துறையை சேர்ந்தவர்கள் யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை. ஆனால் சி.பி.ஐ.-யின் விசாரணை பட்டியலில் 20 போலீஸ் அதிகாரிகளின் பெயர் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

சென்னை நகர முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் அளித்த பேட்டியில் சில போலீஸ் அதிகாரிகளின் பெயர்களை வெளியிட்டு குற்றம் சுமத்தினார். அந்த பட்டியலில் உள்ள ஜெயக்குமாரிடம் முதலில் விசாரணை நடத்தப்பட்டு உள்ளது.

அடுத்தகட்டமாக அந்த பட்டியலில் உள்ள போலீஸ் அதிகாரிகள் விசாரணைக்கு அழைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குட்கா ஊழல் வழக்கில் சி.பி.ஐ. தனது கைது நடவடிக்கையில் போலீஸ் துறையில் முதலில் யாரை குறி வைக்கப்போகிறது? என்பது சென்னை போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பான ஆவலை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்