ரூ.205 கோடி சாலை பணிக்கான நிதியை பெற போலி ஆவணம் தாக்கல் : தனியார் நிறுவனத்துக்கு உலக வங்கி தடை

ரூ.205 கோடி சாலை பணிக்கான நிதியை பெற தனியார் காண்டிராக்ட் நிறுவனம் போலி ஆவணம் தாக்கல் செய்ததை உலக வங்கி கண்டுபிடித்தது. இதைத்தொடர்ந்து அந்த நிறுவனம் 15 மாதங்கள் சாலை பணிகளை மேற்கொள்ள உலக வங்கி தடை விதித்துள்ளது.

Update: 2018-10-17 00:07 GMT
சென்னை,

தமிழகத்தில் உள்ள 26 மாவட்டங்களில் 1,171 கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலையை மேம்படுத்தவும், பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளவும் உலக வங்கி 2,203 கோடியே 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்க ஒப்புக்கொண்டது.

இந்த திட்டத்தின் கீழ் 28.45 கிலோ மீட்டர் தூரத்துக்கு கடலூர்-சித்தூர் மாநில நெடுஞ்சாலையை மேம்படுத்தவும், பராமரிக்கவும் ஓம்சக்தி என்ற காண்டிராக்ட் நிறுவனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது.

அதேபோன்று, கடலூர்-சித்தூர் மாநில நெடுஞ்சாலையுடன் திருக்கோவிலூர்-ஆசனூர் மாநில நெடுஞ்சாலையை இணைக்கும் வகையில் புதிய சாலை அமைக்கவும், ஆற்காடு-திருவாரூர் சாலையை 5 ஆண்டுகளுக்கு பராமரிக்கவும் இந்த நிறுவனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது.

இந்த 3 பணிகளையும் 205 கோடியே 73 லட்சத்து 14 ஆயிரம் ரூபாயில் மேற்கொள்ள உலக வங்கி ஒப்புக்கொண்டது. இதற்கிடையே இந்த நிறுவனம், உலக வங்கியிடம் இருந்து நிதியை பெறுவதற்காக உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்தது.

அந்த ஆவணங்களை தணிக்கை செய்ய, சர்வதேச நிதி நிறுவனத்துக்கு உலக வங்கி உத்தரவு பிறப்பித்தது. அதன்படி சர்வதேச நிதி நிறுவனம் ஓம்சக்தி காண்டிராக்ட் நிறுவனம் அளித்த ஆவணங்களை தணிக்கை செய்த போது, அந்த நிறுவனம் பணி அனுபவம் தொடர்பாக போலி ஆவணங்களை தாக்கல் செய்து மேற்கண்ட பணிகளுக்கான நிதியை பெற முயற்சித்ததை கண்டுபிடித்தது.

இதுதொடர்பாக சர்வதேச நிதி நிறுவனம், உலக வங்கிக்கு அறிக்கை அளித்தது. இதைத்தொடர்ந்து, ஓம்சக்தி காண்டிராக்ட் நிறுவனம் 15 மாதங்களுக்கு சாலைபணிகளை மேற்கொள்ள உலக வங்கி தடை விதித்துள்ளது.

இதுகுறித்து காண்டிராக்ட் நிறுவனத்தைச் சேர்ந்த ஒருவர் கூறும்போது, ‘எங்களது நிறுவன பணியாளர் தவறான ஆவணங்களை அனுப்பி விட்டதாக கருதுகிறோம். கடலூர்-சித்தூர் சாலைப்பணிகள் முடிவு பெற்று விட்டன. தற்போது உலக வங்கி பிறப்பித்துள்ள உத்தரவை பொறுத்தமட்டில் புதிய பணிகளுக்குத்தான் பொருந்தும்’ என்றார்.

நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறும்போது, ‘உலக வங்கியிடம் இருந்து எந்த ஒரு தகவலும் எங்களுக்கு வரவில்லை. இதுதொடர்பாக உலக வங்கி தெளிவுபடுத்த வேண்டும்’ என்றனர். 

மேலும் செய்திகள்