ஆராய்ச்சி மாணவி சோபியா வழக்கை சட்டப்படி சந்திப்பேன் தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி

ஆராய்ச்சி மாணவி சோபியா வழக்கை சட்டப்படி சந்திப்பேன் என்று டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

Update: 2018-10-26 22:21 GMT
சென்னை, 

தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கட்சி தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சட்டப்படி சந்திப்பேன்

ஆராய்ச்சி மாணவி சோபியா, “தமிழிசை இந்த விமானத்தில் வருகிறார் நான் சத்தம் போடப்போகிறேன்” என்று டுவிட்டரில் பதிவிட்டுவிட்டு சத்தம் போட்டுள்ளார். திட்டமிட்டு செய்பவர்களுக்கு எப்படி அறிவுரை கூறமுடியும். எனினும் நான் அறிவுரை கூறத்தான் அவரை அழைத்தேன். ஆனால், அதற்கு அடங்காமல் அவர் சத்தம் போட்டார். அதனால் நான் புகார் தெரிவித்துவிட்டு சென்றுவிட்டேன்.

பின்னர் அவர்கள் மற்றொரு புகாரை தெரிவித்து இருக்கிறார்கள். அதில் தேவேந்திர குல வேளாளர் சமூகத்தை சார்ந்த நான்(சோபியா) என்று குறிப்பிட்டு இருக்கிறார். எதற்கு என்று ஒரு தொலைக்காட்சி கேட்டதற்கு தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தை சேர்ந்த ஆயிரம் பேரை இணைப்பதற்காகத் தான் குற்றாலம் சென்றோம். அதனால் நாங்கள் அதை பதிவு செய்கிறோம் என்கிறார்கள். எந்த அளவுக்கு உள்நோக்கத்தோடு அவர்கள் செயல்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள். அவர் தரப்பில் கொடுக்கப்பட்ட தகவல்கள் அனைத்தும் தவறானது. எனவே இதை சட்டப்படி எதிர்கொள்வேன். அதில் எனக்கு எந்த பயமும் இல்லை.

காங்கிரசில் கோஷ்டி பூசல்

தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கின் தீர்ப்பில் டி.டி.வி.தினகரனும், தி.மு.க.வினரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். ஊழலுக்கு எதிராக பேச ராகுல்காந்திக்கு தகுதி இல்லை. தமிழகத்தில் நடைபெற்ற காங்கிரஸ் ஆர்ப்பாட்டத்தில் கோஷ்டி பூசல் ஏற்பட்டுள்ளது. இதனால், ஆர்ப்பாட்டத்தையே நடத்தமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தமிழகத்தில் பா.ஜனதா காலூன்ற முடியாது என்று கூறுகிறார். ஆனால், அவர்கள் கட்சியினரால் கோஷ்டி பூசல் இன்றி சும்மா இருக்க முடியுமா?

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்