போக்குவரத்து தொழிற்சங்க பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் நாளைய பேச்சில் இறுதி முடிவு?

போக்குவரத்து தொழிலாளர்கள் பிரச்சினை தொடர்பாக நேற்று நடந்த பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டது. நாளை மீண்டும் நடைபெறும் பேச்சுவார்த்தையில் இறுதி முடிவு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Update: 2018-10-29 22:15 GMT
சென்னை,

போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ரூ.6,800 கோடி நிலுவை தொகையை வழங்கவேண்டும். அகவிலைப்படி, பஞ்சப்படி உடனே வழங்கவேண்டும். பண்டிகை முன்பணம் வழங்கவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்கங்கள் தொடர் போராட்டங்களை நடத்திவருகிறார்கள்.

இதற்கிடையே போக்குவரத்து தொழிற்சங்கங்கள் கடந்த 8-ந் தேதி வேலைநிறுத்த நோட்டீஸ் வழங்கினார்கள். இதையடுத்து அரசு, போக்குவரத்துத்துறை மற்றும் தொழிற்சங்கங்கள் பங்கேற்ற முதல்கட்ட முத்தரப்பு பேச்சுவார்த்தை கடந்த 22-ந் தேதி நடந்தது. இதில் உடன்பாடு எதுவும் ஏற்படவில்லை. இதனால் போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம் நடத்தினார்கள்.

2-வதுகட்டமாக முத்தரப்பு பேச்சுவார்த்தை சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தொழிலாளர் ஆணையரக அலுவலகத்தில் நேற்று காலை 11.40 மணிக்கு தொடங்கி பிற்பகல் 12.50 மணி வரை நடந்தது. இதில் முடிவு எதுவும் எற்படவில்லை. இதையடுத்து மாலை 4.15 மணிக்கு மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்கி ஒரு மணி நேரம் நடந்தது. இதில் முன்னேற்றம் ஏற்பட்டதாக தெரிகிறது.

பேச்சுவார்த்தையில் தொழிலாளர் நலத்துறை துணை கமிஷனர் பாலசுப்பிரமணியன், மாநகர போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் அன்பு ஆபிரகாம், அரசு விரைவு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் பாஸ்கரன் உள்பட அதிகாரிகளும், தொ.மு.ச., சி.ஐ.டி.யூ. உள்ளிட்ட தொழிற்சங்க பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.

பேச்சுவார்த்தைக்கு பின்னர் தொ.மு.ச. பொதுச்செயலாளர் சண்முகம் நிருபர்களிடம் கூறியதாவது:-

போக்குவரத்து கழக தொழிலாளர்களுடைய பல்வேறு பிரச்சினைகள் குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றது. சென்ற முறை நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது நிர்வாகம் சரியாக பதில் சொல்லாத காரணத்தால் 26-ந் தேதி முற்றுகை போராட்டம் நடைபெற்றது. அந்த போராட்டத்தின் விளைவாக ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு 31-3-2018 வரை வழங்கவேண்டிய அத்தனை தொகைகளையும் வழங்குவதற்கான நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை பிறப்பித்துள்ளார்கள்.

இதுவரையில் வழங்காமல் இருந்த டீசல் மானியத்தை இப்போது வழங்குவதாக ஒப்புக்கொண்டு இருக்கிறார்கள். அந்த மானியத்தில் இருந்து இப்போது பணியாற்றக்கூடிய தொழிலாளர்களுக்கு நிலுவை தொகையை தீபாவளிக்கு முன்பாக வழங்குவதாக அறிவித்து இருக்கிறார்கள். மேலும் பண்டிகை முன்பணம் எப்போது வழங்குவது என்பது குறித்து நாளை (புதன்கிழமை) மாலை 4 மணிக்கு அறிவிப்பதாக தெரிவித்துள்ளனர்.

கடந்தமுறை நடந்த போராட்டத்தில் பழிவாங்கப்பட்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டவர்களை மீண்டும் பணியில் சேர்த்துக்கொள்ளவேண்டும். பணி மாற்றம் செய்துள்ள 86 பேரையும் திரும்ப எடுத்துக்கொண்டால் தான் மற்ற பிரச்சினைகளை பற்றி பேசமுடியும் என்று நாங்கள் கூறியிருக்கிறோம். இந்த பிரச்சினையையும் நாளை மாலை 4 மணிக்கு மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி முடிவெடுப்பதாக கூறியுள்ளனர். இதை உறுதிப்படுத்திய பிறகு நாங்கள் மற்ற நடவடிக்கைகளை பற்றி கலந்துபேசி முடிவெடுப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்