விலை இல்லா பொருட்கள் வழங்குவதை விமர்சனம் செய்தால் எதிர்ப்போம் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேட்டி

விலை இல்லா பொருட்கள் வழங்கும் திட்டத்தை விமர்சனம் செய்தால் எதிர்ப்போம் என்று அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்தார்.

Update: 2018-11-09 21:52 GMT
திருவொற்றியூர்,

சென்னை காசிமேடு பவர்குப்பம் பகுதியில் உள்ள பழமையான உச்சி காளியம்மன் கோவில் மிகவும் சிதிலமடைந்து காணப்பட்டது. அதனை புனரமைத்து தரும்படி அ.தி.மு.க. வடசென்னை வடக்கு மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் தலைமையில் கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியனிடம் கிராம மக்கள் கோரிக்கை வைத்தனர்.

அதை ஏற்றுக்கொண்ட அமைச்சர், அந்த கோவிலை புனரமைத்து புதுப்பித்து கொடுத்தார். இதையடுத்து நேற்று அந்த கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. இதில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன், அ.தி.மு.க. அவைத்தலைவர் மதுசூதனன் உள்பட திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பின்னர் அமைச்சர் ஓ.எஸ்.மணியன், நிருபர்களிடம் கூறியதாவது:-

இதுவரை எத்தனையோ திரைப்படங்கள் அ.தி.மு.க.வை விமர்சனம் செய்து வந்து உள்ளன. அவற்றை எல்லாம் அ.தி.மு.க.வின் வளர்ச்சிக்காகத்தான் என்று ஏற்றுக்கொள்வோம். ஆனால் ‘சர்கார்’ படத்தை அப்படி ஏற்றுக்கொள்ள முடியவில்லை

தமிழகத்தில் சமூக பார்வையுடன் ஏற்றத்தாழ்வு இல்லாத சமூகத்தை உருவாக்கவேண்டும் என்பதையே எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் கொள்கையாக கொண்டிருந்தனர். சமூகத்தில் பின்தங்கிய, வறுமையில் வாடும் ஏழை மக்களின் வளர்ச்சிக்காக திட்டத்தை கொண்டுவரவேண்டும் என்பதற்காக விலை இல்லா பொருட்களை வழங்கினார்கள்.

பின்தங்கிய காலனி மக்களை கல்வி, பொருளாதாரத்தில் மேம்படுத்த விலைஇல்லா பொருட்கள் வழங்கும் திட்டத்தை நிறுத்தமுடியாது. அதனைப்பற்றி விமர்சனம் செய்தாலோ, தடுக்க நினைத்தாலோ, அது யாராக இருந்தாலும் எதிர்ப்போம். அதனை நிரூபிக்கும் வகையில், அ.தி.மு.க.வினர் போராட்டத்தால் தியேட்டர்களில் ‘சர்கார்’ படகாட்சிகளை ரத்து செய்யப்பட்டன.

‘சர்கார்’ படத்தை கமல் ஆதரிப்பதாக கூறி உள்ளார். அவரை மனிதராகவே மதிக்கவில்லை. பின்னர் எப்படி அவரை தலைவராக ஏற்று, அதற்கு பதில் கூறமுடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்