தமிழக அரசின் அரசாணையை எதிர்த்து மு.க.ஸ்டாலின் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு தள்ளிவைப்பு

புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட்டதில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி போலீஸ் விசாரணைக்கு உத்தரவிட்ட தமிழக அரசின் அரசாணையை எதிர்த்து மு.க.ஸ்டாலின் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பை ஐகோர்ட்டு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது.

Update: 2018-11-15 00:31 GMT
சென்னை,

ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் தி.மு.க. ஆட்சிக்காலத்தில் புதிய தலைமைச் செயலக கட்டிடம் கட்டப்பட்டது. இதில் முறைகேடு நடந்திருப்பதாக கூறி, இதுகுறித்து விசாரிக்க கடந்த 2011-ம் ஆண்டு ஐகோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி ஆர்.ரெகுபதி தலைமையில் விசாரணை ஆணையத்தை அமைத்து அப்போதைய முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.

இந்த ஆணையத்துக்கு எதிராக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், விசாரணை ஆணையம் என்பதே கண்துடைப்பு நாடகம் என்று கருத்து தெரிவித்தார்.

பின்னர், ‘நீதிபதி ஆர்.ரெகுபதி ஆணையத்தை கலைத்து, அதன் அறிக்கையை பரிசீலித்து தேவைப்பட்டால் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிடவேண்டும் என்று நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் தீர்ப்பு அளித்தார்.

இதன்படி, லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணைக்கு உத்தரவிட்டு தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இந்த அரசாணையை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், மு.க.ஸ்டாலின், துரைமுருகன் ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை நீதிபதி புஷ்பா சத்யநாராயணா விசாரித்து வருகிறார். மனுதாரர்கள் சார்பில் மூத்த வக்கீல் பி.வில்சன் நேற்று முன்தினம் ஆஜராகி வாதிட்டார். இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசின் சார்பில் மாநில தலைமை அரசு குற்றவியல் வக்கீல் ஏ.நடராஜன் ஆஜராகி வாதிட்டார். தன் வாதத்தில் அவர் கூறியதாவது:-

இந்த வழக்கில் ஏற்கனவே ஐகோர்ட்டு தனி நீதிபதி என்ன உத்தரவு பிறப்பித்துள்ளாரோ, அதன் அடிப்படையில்தான் லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணைக்கு உத்தரவிட்டு, தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. இதில் எந்த விதிமீறலும் நடைபெறவில்லை. நீதிபதி ஆர்.ரெகுபதி ஆணையம் சமர்ப்பித்த அறிக்கையை நன்கு ஆய்வு செய்து அதில் வழக்கு தொடர்வதற்கான முகாந்திரம் இருப்பதாக பரிசீலித்தபிறகே, லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட்டதில் ரூ.629 கோடி வரை முறைகேடு நடந்துள்ளது. இவ்வளவு பெரிய முறைகேட்டை எப்படி விட்டுவிட முடியும்?.

இந்த முறைகேடு குறித்து விரிவாக விசாரிக்க வேண்டியதுள்ளது. தற்போது போலீஸ் விசாரணை ஆரம்பகட்டத்தில்தான் உள்ளது. நீதிபதி ஆர்.ரெகுபதி ஆணையத்தின் அறிக்கைப்படி, வழக்குப்பதிவு செய்ய முகாந்திரம் உள்ளதா, இல்லையா என்பதைக் கண்டறிய மொத்த பக்கத்தையும் படித்துப்பார்க்க வேண்டிய அவசியமில்லை. முறைகேடுக்கு முகாந்திரம் இருக்கிறது என்ற முடிவுக்குவர ஒரு பக்கமே போதுமானதாக உள்ளது. எனவே இந்த மனுவை தள்ளுபடி செய்யவேண்டும்.

இவ்வாறு அவர் வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார்.

மேலும் செய்திகள்