ஜனவரியில் இருந்து அக்டோபர் வரை தமிழகத்தில் சாலை விபத்துகளில் சிக்கி 10,378 பேர் பலி நெடுஞ்சாலைத்துறை தகவல்

தமிழகத்தில் ஜனவரியில் இருந்து அக்டோபர் வரை நடந்த சாலை விபத்தில் சிக்கி 10 ஆயிரத்து 378 பேர் உயிரிழந்து உள்ளனர் என்று மாநில சாலைப்பாதுகாப்புக் குழு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

Update: 2018-11-15 22:25 GMT
சென்னை,

மாநில சாலைப் பாதுகாப்புக் குழு கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர் கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமை தாங்கினார். தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் முன்னிலை வகித்தார்.

தமிழகத்தில் கடந்த ஆண்டு ஜனவரியில் இருந்து அக்டோபர் வரை நடந்த சாலை விபத்தில் சிக்கி 14 ஆயிரத்து 77 பேரும், இந்த ஆண்டு ஜனவரியில் இருந்து அக்டோபர் வரை 10 ஆயிரத்து 378 பேரும் உயிரிழந்து உள்ளனர். இது கடந்த ஆண்டை விட 26 சதவீதம் குறைவு.

கடந்த ஆண்டு நடந்த விபத்துகளில் 5 ஆயிரத்து 559 பேருக்கும், நடப்பாண்டு 5 ஆயிரத்து 51 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டு உள்ளது. இது கடந்த ஆண்டை விட 9 சதவீதம் குறைவாகும்.

இரு சக்கர வாகனங்களில் 32 சதவீதமும், நான்கு சக்கர வாகனங்களில் 25 சதவீதமும் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இரு சக்கர வாகனங்களில் இறந்தவர்களில் 75 சதவீதம் பேர் தலைக்கவசம் அணியாததால் ஏற்பட்டது என நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

பின்னர் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேசியதாவது:- தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள முக்கிய சந்திப்புகளில் விபத்துகளை தவிர்க்க உயர் கோபுர விளக்குகளை பொருத்தவும், தகவல் மற்றும் எச்சரிக்கை குறியீடுகளை வாகன ஓட்டிகள் தெளிவாக தெரிந்து கொள்ளும் வகையிலும் பொருத்த வேண்டும். நெடுஞ்சாலைகளில் வாகனங்களை நிறுத்துவதால் சமீப காலமாக அதிக விபத்துகள் நடந்து அதனால் உயிரிழப்புகளும் ஏற்படுகிறது.

தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் தேவையான கனரக சரக்கு வாகன நிறுத்தங்கள் அமைக்க வேண்டும். இதனை முறைப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நெடுஞ்சாலைகளில் முறையற்று நிறுத்தப்பட்ட வாகனங்களில் ஏற்பட்ட விபத்துகளில் கடந்த ஆண்டு 297 பேர் உயிரிழந்துள்ளனர்.

அனைத்து சாலைகளிலும், சீட் பெல்ட் அணியாதது, மது அருந்தி வாகனம் ஓட்டுதல், செல்போன் பேசி வாகனம் இயக்குதல், தலைக்கவசம் அணியாதது ஆகிய குற்றங்களுக்கு முறையான எச்சரிக்கை பலகைகள் வைக்க சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலை மற்றும் உள்ளாட்சி துறைகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். நடப்பாண்டு அக்டோபர் வரை மொத்தம் 2 லட்சத்து 77 ஆயிரம் ஓட்டுநர்களின் உரிமங்கள் மேற்கண்ட குற்றங்களுக்காக தற்காலிமாக தடை செய்யப்பட்டுள்ளது.

சாலை பராமரிப்பு பணிகள் நடைபெறும் இடங்களில் தக்க எச்சரிக்கை பலகைகள் வைக்கவும், அனைத்து சாலைகளிலும் உள்ள நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்றவும் வேண்டும். கடந்த ஆண்டு 3 ஆயிரத்து 507 பாதசாரிகள் உயிரிழந்துள்ளனர். பள்ளி குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பெற முக்கிய நகரங்களில் சாலை பாதுகாப்பு பூங்காக்கள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நெடுஞ்சாலைகளில் அதிக விபத்து நடக்கும் இடங்களிலும், பொதுமக்கள் நடமாடும் இடங்களிலும் வாகனத்தின் வேகத்தை குறைக்க சிமிட்டும் சிவப்பு விளக்குகள் பொருத்தவும், நேருக்கு நேர் மோதும் விபத்துகளை தடுக்க நெடுஞ்சாலைகளின் வளைவுகளில் சாலையின் நடுவில் தடுப்பு சுவர் அமைக்கவும் வேண்டும்.

வாகனத்தின் பதிவு எண்ணை தானாக கண்டறிந்து புகைப்படம் எடுக்கும் கருவியை சோதனை முறையில் செங்கல்பட்டில் இருந்து திருச்சி வரை 280 கிலோ மீட்டருக்கு பொருத்தி அதிவேகமாக செல்லும் வாகனங்களை கண்டுபிடித்து கணினி மூலமாக அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் அதிகமாக விபத்து நடக்கும் இடங்களை கண்டறிந்து குறுகிய கால நடவடிக்கைகள் மற்றும் நிரந்தர நடவடிக்கைகள் எடுத்து அந்த இடத்தில் மீண்டும் விபத்து நடக்கிறதா? என்பதை கண்காணிக்க வேண்டும். தமிழகத்தில் சாலை பாதுகாப்பு சட்டம் மற்றும் விதிகள் ஏற்படுத்த குழு அமைத்து அறிக்கை அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் உள்துறை, நிதித்துறை, நெடுஞ்சாலைத்துறை, போக்குவரத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்