‘பதவிக்காக, தி.மு.க. இலவு காத்த கிளியாக உள்ளது’ பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி

‘பதவிக்காக, தி.மு.க. இலவு காத்த கிளியாக உள்ளது’ என மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

Update: 2018-11-15 22:54 GMT
ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

‘கஜா’ புயல் சீற்றம் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக அரசு எல்லா முன் ஏற்பாடுகளும் செய்து இருப்பதாக சொல்கின்றனர். மத்திய அரசு உதவிகளை செய்ய தயாராக இருக்கிறது.

பிரதமர் தனிப்பட்ட மனிதர் கிடையாது. திரைக்கடல் ஓடியும் திரவியம் தேடு என்ற தமிழ் பழமொழிக்கு ஏற்ப பல நாடுகளுக்கு சென்று உள்ளார். பல ஒப்பந்தங்கள் செய்து உள்ளார்.

இவர்கள் என்ன செய்தார்கள். தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் யாராவது ஒரு முறையாவது சொந்த செலவில் வெளிநாடு சென்றது உண்டா? தி.மு.க.வினர் அரசு நிகழ்ச்சி என்று சென்றுவிட்டு என்ன செய்தார்கள் என்பது மக்களுக்கு தெரியும்.

பிரதமர் மீது ஏதாவது ஒரு குற்றச்சாட்டு சொல்ல முடியுமா? பிரதமர் பொழுதுபோக்கிற்கு சென்று இருக்கிறாரா? பிரதமர் ஒரு நாளாவது ஒய்வு எடுத்தது உண்டா? எது பேசினாலும் அதற்கு வரைமுறை இருக்கிறது. தி.மு.க. பதவிக்காக இலவு காத்த கிளியாக உள்ளது. மீனவர்களுக்கான செல்போன் செயலி (ஆப்) சோதனை கட்டத்தில் உள்ளது.

பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் ஆகியவற்றின் விலை நிர்ணயம் மத்திய அரசின் விருப்பத்தின்பேரில் நடக்கவில்லை. தேர்தலுக்காக பெட்ரோல் விலையை குறைப்பதாக கூறுகின்றனர். அப்படி என்றால் கியாஸ் விலை ஏன் அதிகரிக்க வேண்டும்? தேர்தலுக்காக உயர்த்தப்பட்டதா? விலை ஏற்றம் மற்றும் குறைப்பு உலக சந்தையின் நிலவரத்தின் அடிப்படையில் நடக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்