சிலை கடத்தல் வழக்கில் அதிரடி நடவடிக்கை சென்னையில், போலீஸ் துணை சூப்பிரண்டு கைது

சிலை கடத்தல் வழக்கில் குற்றவாளிகளுக்கு துணை போன துணை போலீஸ் சூப்பிரண்டு ஜீவானந்தம் சென்னையில் நேற்று கைது செய்யப்பட்டார். அவர் சிலை கடத்தல் குற்றவாளிகளிடம் லட்சக்கணக்கில் லஞ்சம் வாங்கியது அம்பலமாகி உள்ளது.

Update: 2018-11-15 23:25 GMT
சென்னை,

இந்த சம்பவம் தொடர்பாக சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

நெல்லை மாவட்டம், பழவூரில் பழமையான நாறும்பூ நாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பூட்டை உடைத்து 13 பஞ்சலோக சிலைகள் கடந்த 2005-ம் ஆண்டு திருட்டு போய்விட்டது. திருட்டு போன சிலைகளில் ரூ.24 கோடி மதிப்புள்ள ஆனந்த நடராஜர் சிலை, ஆவுடையம்மன் சிலை உள்பட 4 சிலைகள் மும்பை கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து லண்டன் வழியாக அமெரிக்கா கடத்தி செல்லப்பட்டது. பிரபல சிலை கடத்தல் மன்னன் சுபாஸ்கபூருக்கு சொந்தமான மியூசியம் அமெரிக்காவில் நியூயார்க் நகரில் உள்ளது. கடத்தப்பட்ட 4 சிலைகளும் இந்த மியூசியத்தில் வைக்கப்பட்டன.

சென்னையில் சிலை கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட தொழில் அதிபர் தீனதயாளன் மூலம் மேற்கண்ட சிலைகள் அமெரிக்காவுக்கு கடத்தி செல்லப்பட்டு, சிலை கடத்தல் மன்னன் சுபாஸ்கபூரிடம் விற்கப்பட்டது. ஆனந்த நடராஜர் சிலையின் இடது கை துண்டிக்கப்பட்டு விட்டது. அமெரிக்காவில் துண்டிக்கப்பட்ட கைக்கு பதிலாக புதிய கை வெல்டிங் மூலம் இணைக்கப்பட்டு விட்டது. லண்டனை சேர்ந்த பிரபல சிலை தயாரிக்கும் நிபுணர் நிபனா நள பெர்ஸ்மித் என்பவர் சிலையில் கையை இணைக்கும் வேலையை செய்துள்ளார். இதற்காக அவருக்கு ரூ.1 கோடி கூலியாக கொடுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவுக்கு கடத்தி செல்லப்பட்ட ஆனந்த நடராஜர் சிலை உள்பட 4 சிலைகளையும் சென்னைக்கு கொண்டு வந்துவிட்டனர். இந்த வழக்கை விசாரித்த சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் அதிகாரிகள் காதர்பாட்சா, காசிப், ஜீவானந்தம் ஆகியோர் குற்றவாளிகளுக்கு துணை போய் உள்ளனர். சிலைகள் அமெரிக்காவுக்கு கடத்திச் செல்லப்பட்ட விசயத்தை மறைத்து, அந்த 4 சிலைகளையும் சென்னையில் மீட்டதாக வழக்கில் காட்டி விட்டனர்.

குற்றவாளிகளை கடத்தல் வழக்கில் இருந்து தப்ப வைப்பதற்காக இந்த நாடகத்தை அரங்கேற்றி விட்டனர். இதற்காக லட்சக்கணக்கில் லஞ்சப்பணம் கைமாறி உள்ளது.

அமெரிக்காவுக்கு சிலைகள் கடத்தி செல்லப்பட்ட விசயத்தை மறைத்து, இந்த வழக்கில் கோர்ட்டில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. வழக்கு விசாரணை முடியும் தருவாயில், மறைக்கப்பட்ட உண்மைகளை கண்டறிவதற்காக ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் தலைமையில் மீண்டும் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

விசாரணையில் மறைக்கப்பட்ட உண்மைகள் வெளிச்சத்துக்கு கொண்டு வரப்பட்டது. சிலைகள் அமெரிக்காவுக்கு கடத்தப்பட்ட உண்மையை மறைத்து, குற்றவாளிகளுக்கு துணைபோன போலீஸ் துணை சூப்பிரண்டு ஜீவானந்தம் (வயது 54) தற்போது திருச்சி மாவட்ட மது விலக்கு அமலாக்கப்பிரிவில் பணியாற்றி வந்தார்.

அவரை இன்று (நேற்று) சென்னைக்கு வரவழைத்து ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் நேரடியாக விசாரணை நடத்தினார். விசாரணைக்குப்பிறகு அவர் கைது செய்யப்பட்டார். அவரை கும்பகோணம் சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

இந்த வழக்கில் இன்னொரு போலீஸ் துணை சூப்பிரண்டு காதர்பாட்சா மற்றும் ஓய்வு பெற்ற துணை போலீஸ் சூப்பிரண்டு காசிப் ஆகியோருக்கும் தொடர்பு உள்ளது. அவர்கள் விசாரணைக்கு அழைக்கப்பட்டனர். ஆனால் அவர்கள் ஆஜராகவில்லை. காதர்பாட்சா தற்போது பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்