கரையை கடந்த கஜா: போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க முதல்வர் பழனிசாமி உத்தரவு

கஜா புயலால் உயிரிழந்த 12 பேர் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

Update: 2018-11-16 05:47 GMT
சென்னை

கஜா தீவிர புயலின் மையப்பகுதி நள்ளிரவு  கரையை கடந்தது. கஜா புயலின் கடைசி பகுதியும் நாகை - வேதாரண்யம் இடையே இன்று காலை கரையைக் கடந்தது. புயல் கரையைக்கடக்கும் போது நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் கடும் காற்று வீசியது.

கஜா புயலால் தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் கடும் சேதம் அடைந்து உள்ளன.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க மின்துறை, சுகாதாரத்துறை, பேரிடர் மேலாண்மை துறைக்கு முதலமைச்சர் உத்தரவிட்டு உள்ளார். சேத விவரங்கள் குறித்து அதிகாரிகள் அமைச்சர்களிடம் கேட்டறிந்த பின்னர் முதலமைச்சர் உத்தரவு பிறபித்து உள்ளார்.

புயல் சேத மதிப்பு குறித்து கணக்கெடுக்கும் பணிநடைபெற்று வருகிறது.  இதுவரை 11 பேர் உயிரிழந்ததாக தகவல் கிடைத்து உள்ளது.  உயிர் இழந்தவர்கள் குடும்பத்திற்கு முதல் அமைச்சர் நிவாரண நிதியில் இருந்து ரூ.10 லட்சம் வழங்கப்படும். படுகாயம் அடைந்தவர்களுக்கு ஒரு லட்சமும்,  சிறு காயம் அடைந்தவர்களுக்கு ரூ.25 ஆயிரமும் வழங்கப்படும்.

நாகை மாவட்டத்தில் அதிக பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.  82 ஆயிரம் பேர் 421 முகாம்களில் தங்கவைக்கப்பட்டு உள்ளனர்.

அமைச்சர்கள் அந்தந்த மாவட்டங்களிலேயே தங்கி இருந்து நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.  பொதுப்பணித்துறை அதிகாரிகள்  சேதபகுதிகளில்  முகாமிட்டு உள்ளனர். என்று முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார்.

கஜா புயலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. இதில் ஆண்கள் 8 பேரும், பெண்கள் 4 பேரும் அடங்குவர். 

கடலூரில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது, சில இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. பகல் 12 மணிக்குள் அனைத்தும் சரிசெய்யப்படும் என  அமைச்சர் எம்.சி.சம்பத் கூறி உள்ளார்.

மீனவ கிராமங்களில் கஜா புயல் பாதிப்பு கணக்கெடுக்கும் பணிகள் தொடங்கியது  என  அமைச்சர் ஜெயக்குமார் கூறி உள்ளார்.

புயல் குறித்து அமைச்சர்  உதயகுமார் கூறியதாவது:-

மின் விநியோகத்தை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவாக இயல்பு நிலை திரும்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முதலமைச்சர் உத்தரவின் பேரில் இரவு முதலே மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. கஜா புயலால் ஏற்பட்டுள்ள சேதங்களை கணக்கிடும் பணி இனி தான் தொடங்கும், சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும்.

முதலமைச்சர் உத்தரவின்படி போர்க்கால அடிப்படையில் அனைத்து துறைகளும் செயல்படுகிறது. விரைவாக இயல்வு நிலை திரும்ப துரிதநடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என  கூறினார்.

மேலும் செய்திகள்