புயல் சேதம் குறித்து கணக்கெடுக்க சென்ற கர்ப்பிணி அதிகாரி உள்பட 3 பேர் மீது தாக்குதல்

புயல் சேதம் குறித்து கணக்கெடுக்க சென்ற கர்ப்பிணி அதிகாரி உள்பட 3 பேர் தாக்கப்பட்டனர்.

Update: 2018-11-19 22:44 GMT
பேராவூரணி,

கஜா புயலால் தஞ்சை மாவட்டத்தில் பட்டுக்கோட்டை, பேராவூரணி, அதிராம்பட்டினம் உள்ளிட்ட பல பகுதிகளில் ஏராளமான வீடுகள் சேதமடைந்தன. பேராவூரணியில் தென்னை, வாழை மரங்கள் பெருமளவு சாய்ந்து விவசாயிகளுக்கு மிகுந்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் பேராவூரணி அருகே உள்ள காலகம் கிராமத்தில் புயல் பாதிப்பு குறித்து கணக்கெடுக்க சென்ற கர்ப்பிணி அதிகாரி உள்பட 3 பேர் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

காலகம் கிராமத்தில் புயல் பாதிப்பு குறித்து கணக்கெடுக்க கிராம நிர்வாக அலுவலர்கள் பிருந்தா (கர்ப்பிணி), செந்தில்குமார், கிராம உதவியாளர் விஜயா ஆகியோர் சென்றனர். அப்போது அந்த கிராம மக்கள் போதிய நிவாரண உதவி வழங்கவில்லை எனக்கூறி கிராம நிர்வாக அலுவலர்கள் பிருந்தா, செந்தில்குமார் மற்றும் கிராம உதவியாளர் விஜயா ஆகியோரை சூழ்ந்து சரமாரியாக தாக்கினர்.

இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதில் காயமடைந்த அதிகாரிகளை சிலர் மீட்டு பேராவூரணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த தாக்குதலை கண்டித்து கிராம நிர்வாக அலுவலர்கள் 25-க்கும் மேற்பட்டோர் சேத மதிப்பீடு கணக்கெடுப்பு பணியை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பேராவூரணியில் புயல் பாதிக்கப்பட்ட இடங்களில் சரிவர மீட்பு பணிகள் நடைபெறவில்லை. சாலைகளில் ஆங்காங்கே மரங்கள் விழுந்து கிடப்பதால் அதிகாரிகள் கிராமங்களுக்கு செல்ல முடியாத நிலை உள்ளது. இணையதள வசதி இல்லாததால் அமைச்சர்களோ, அதிகாரிகளோ பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டு செல்லும் விஷயம் பெரும்பாலானவர்களுக்கு தெரியவில்லை.

இதனாலேயே அதிகாரிகள் மீது ஆத்திரமடைந்து தாக்குதல் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் அதிகாரிகளும் கிராமங்களுக்கு செல்ல தயக்கம் காட்டி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்