புயலால் முழுவதும் சேதம் அடைந்த படகு, வலைகளுக்கு ரூ.85 ஆயிரம் தென்னை ஹெக்டேருக்கு ரூ.2.64 லட்சம்; நெல் பயிருக்கு ரூ.13,500 மீட்பு, நிவாரண பணிக்கு ரூ.1,000 கோடி எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

கஜா புயலால் சேதம் அடைந்த குடிசை, வீடுகள், மீன்பிடி படகுகள், விவசாய பயிர்களுக்கு இழப்பீட்டு தொகையை தமிழக அரசு அறிவித்தது. மீட்பு நிவாரண பணிக்கு ரூ.1,000 கோடி ஒதுக்கீடு செய்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.

Update: 2018-11-20 00:15 GMT
சென்னை,

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஓர் அறிக்கை வெளியிட்டு உள்ளார்.
அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:- 16-ந் தேதியன்று 110 கி.மீ. வேகத்தில் கஜா புயல் கரையை கடந்தபோது நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திண்டுக்கல், திருச்சி, சிவகங்கை, கடலூர், கரூர், ராமநாதபுரம், தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த காற்றினாலும், கன மழையினாலும் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டன.

கஜா புயல் காரணமாக ஏற்பட்ட சேதங்களை சீரமைக்கும் பணிகள் குறித்து தலைமைச் செயலகத்தில் 19-ந் தேதியன்று என் தலைமையில் ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது.

கஜா புயல் மற்றும் கனமழையின் காரணமாக நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் 514 பாதுகாப்பு முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு, அதில் 2 லட்சத்து 51 ஆயிரத்து 674 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் குடிநீர் வழங்கப்படுகின்றன. ஒவ்வொரு குடும்பத்திற்கும் 10 கிலோ அரிசி, ஒரு வேட்டி, ஒரு சேலை மற்றும் ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் ஆகியவையும் வழங்கப்பட்டு வருகின்றன.

இது தவிர, முகாம்களில் தங்கியுள்ளவர்களுக்கு கூடுதலாக ஒரு வேட்டியும், சேலையும் வழங்கவும் நான் உத்தரவிட்டுள்ளேன். மேலும், கூடுதலாக 4 லிட்டர் மண்ணெண்ணெய் வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்.

முகாம்களில் தங்கியுள்ள குடும்பங்கள், வீடுகளை இழந்தவர்கள், மீன்பிடி கலன்கள், வல்லம், கட்டுமரம் சேதமடைந்ததனால் பாதிக்கப்பட்ட மீனவ குடும்பங்களுக்கு உடனடி வாழ்வாதார நிவாரணமாக குடும்பம் ஒன்றுக்கு தலா 5 ஆயிரம் ரூபாயும், துணிமணிகள், பாத்திரங்கள் ஆகியவை வாங்க குடும்பம் ஒன்றுக்கு 3,800 ரூபாயும் வழங்க உத்தரவிட்டுள்ளேன். முகாம்களில் தங்கியுள்ள பெரியோர்கள், தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஆவின் நிறுவனம் மூலம் பால் வழங்கவும் நான் உத்தரவிட்டுள்ளேன்.

உயிரிழந்த 231 பசு மற்றும் எருமை மாடுகளுக்கு தலா 30 ஆயிரம் ரூபாயும், 20 காளை மாடுகளுக்கு தலா 25 ஆயிரம் ரூபாயும், 19 கன்றுகளுக்கு தலா 15 ஆயிரம் ரூபாயும், 1,181 ஆடுகளுக்கு தலா 3 ஆயிரம் ரூபாயும், 14 ஆயிரத்து 986 கோழி மற்றும் பறவைகளுக்கு தலா 100 ரூபாயும் வழங்க உத்தரவிட்டுள்ளேன்.

கஜா புயல் மற்றும் கனமழையின் தாக்கத்தினால் முழுவதும் சேதமடைந்த குடிசை வீடு ஒன்றுக்கு 10 ஆயிரம் ரூபாயும், பகுதி சேதமடைந்த குடிசை வீடுகளுக்கு 4,100 ரூபாயும், வழங்க உத்தரவிட்டுள்ளேன். முழுவதும் சேதமடைந்த குடிசைகளுக்கும், வீடுகளுக்கும் பதிலாக தகுதி வாய்ந்த நபர்களுக்கு புதியதாக வீடு கட்ட உரிய நிதி உதவி வழங்கப்படும்.

கஜா புயல் தாக்குதல் காரணமாக 12 மாவட்டங்களில் 32 ஆயிரத்து 706 ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த நெற் பயிர்கள், 30 ஆயிரத்து 100 ஹெக்டேர் தென்னை மரங்கள், 7,636 ஹெக்டேர் மக்காச்சோளம், 4,747 ஹெக்டேர் வாழை, 4 ஆயிரம் ஹெக்டேர் காபி பயிர், பயறு, பருத்தி மற்றும் பலா மரங்கள் போன்றவையும் 3,253 ஹெக்டேர் முந்திரி பயிர்களும், 500 ஹெக்டேர் கரும்பு பயிர்களும், 945 ஹெக்டேர் மா மரங்களும், 2,707 ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த காய்கறி பயிர்களும் சேதம் அடைந்துள்ளன.

தென்னை பயிருக்கு ஏற்பட்ட சேதங்களுக்கு நிவாரணமாக ஒரு மரத்திற்கு 600 ரூபாய் வழங்கவும், அவற்றை வெட்டி அகற்றிட ஒரு மரத்திற்கு 500 ரூபாய் வழங்கவும், ஆக மொத்தம் ஒரு மரத்திற்கு 1,100 ரூபாய் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

சுமார் 175 மரங்கள் நடப்பட்டுள்ள ஹெக்டேர் ஒன்றுக்கு 1 லட்சத்து 92 ஆயிரத்து 500 ரூபாய் நிவாரணம் வழங்கப்படும். இதுதவிர, மறுசாகுபடி செய்ய ஹெக்டேருக்கு 72 ஆயிரத்து 100 ரூபாய் வழங்கப்படும். இதன் மூலம் நிவாரணம் மற்றும் மறுசாகுபடிக்கு தென்னை விவசாயிகள் ஹெக்டேருக்கு 2 லட்சத்து 64 ஆயிரத்து 600 ரூபாய் பெறுவர். மேலும், சொட்டு நீர் பாசனத்திற்கு சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியமும், மற்ற விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் வழங்கப்படும்.

நெல் பயிர்களுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கு நிவாரணமாக ஹெக்டேருக்கு 13 ஆயிரத்து 500 ரூபாய் வழங்கப்படும். கரும்பு, வாழை, காய்கறிகள் மற்றும் மலர்கள் போன்ற பாசன பயிர்களுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கு நிவாரணமாக ஹெக்டேருக்கு 13 ஆயிரத்து 500 ரூபாய் வழங்கப்படும்.

இப்பயிர்களை மறுசாகுபடி செய்ய ஆகும் செலவில் 40 முதல் 50 சதவீத மானியம் வழங்கப்படும். முந்திரி பயிர்களுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கு நிவாரணமாக ஹெக்டேருக்கு 18 ஆயிரம் ரூபாயும், அவற்றை வெட்டி அகற்றிட மரத்திற்கு 500 ரூபாயும், மறுசாகுபடி செய்ய 40 முதல் 50 சதவீதம் மானியம் வழங்கப்படும்.

சொட்டு நீர் பாசனம் அமைப்பதற்காக சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானியமாக ஹெக்டேர் ஒன்றுக்கு ரூபாய் ஒரு லட்சம் வரையும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீதம் மானியமாக 75 ஆயிரம் ரூபாய் வரையும் மறுசாகுபடி செய்வதற்கு வழங்கப்படும்.

பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள பொதுமக்களுக்கு பால் எளிதில் கிடைத்திட ஆவின் நிறுவனம் மற்றும் கூட்டுறவு நியாய விலைக்கடை கள் மூலமாக வினியோகம் செய்திடவும் நான் உத்தரவிட்டுள்ளேன்.

குடிநீர் வினியோகத்தை பொறுத்தவரையில் நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களுக்கு உட்பட்ட பாதிக்கப்பட்ட 184 நகர்ப்புற பகுதிகளில் 98 நகர்புற பகுதிகளிலும், பேரூராட்சிக்கு உட்பட்ட 270 வார்டுகளில் 252 வார்டுகளிலும், 7,248 ஊரக பகுதிகளில் 1,266 ஊரக பகுதிகளிலும் குடிநீர் வினியோகம் சீரமைக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் மின்சாரம் இல்லாத இடங்களில் ஜெனரேட்டர்கள் உதவியுடனும் மற்றும் லாரிகள் மூலமாகவும் தங்கு தடையின்றி மக்களுக்கு குடிநீர் வழங்கிடவும் நான் உத்தரவிட்டுள்ளேன்.

12 மாவட்டங்களில் கஜா புயலின் காரணமாக 86 ஆயிரத்து 702 மின் கம்பங்கள், 841 மின்மாற்றிகள், 201 துணை மின் நிலையங்கள் சேதமடைந்துள்ளன. மின்சார வினியோகத்தை பொறுத்தவரையில் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு கூடுதலாக மின்கம்பங்கள் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அனுப்பிட உத்தரவிட்டுள்ளேன்.

மேலும், சுமார் 77 ஆயிரம் மின்கம்பங்கள் அண்டை மாநிலங்களிலிருந்து வரவழைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மின்சார சீரமைப்பு பணிகளை மேற்கொள்வதற்காக தமிழ்நாடு மின்சார வாரியத்தை சேர்ந்த 21 ஆயிரத்து 461 பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இதுதவிர, பிற மாவட்டங்களிலிருந்தும், உள்ளூரிலிருந்தும் கூடுதலாக பணியமர்த்த உத்தரவிட்டுள்ளேன்.

மின்சார கட்டமைப்புக்கு ஏற்பட்ட இது போன்ற பேரழிவை சீர்செய்ய அதிக காலம் ஆகும் என்றபோதிலும் எனது தலைமையிலான அரசின் இடைவிடாத முயற்சியிலும், கஜா புயலினால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள அனைத்து இடங்களிலும் விரைவில் மின் வசதி வழங்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இத்தகைய பணிகளை மின்வாரியம் விரைந்து முடித்திட முதற்கட்டமாக 200 கோடி ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளேன்.

கஜா புயல் காரணமாக நாகப்பட்டினம், புதுக்கோட்டை, திருவாரூர், தஞ்சாவூர், கடலூர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் முதற்கட்ட கணக்கீட்டின்படி கட்டுமரங்கள், எப்.ஆர்.பி. படகுகள், விசைப்படகுகள் போன்ற சுமார் 4,844 மீன்பிடி படகுகள், 5,550 மீன் வலைகள் மற்றும் 5,727 படகுகளின் என்ஜின்கள் சேதமடைந்துள்ளன.

பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நிவாரணமாக, முழுவதும் சேதமடைந்த வலைகளுடன் கூடிய கட்டுமரங்களுக்கு 42 ஆயிரம் ரூபாயும், பகுதி சேதமடைந்த வலைகளுடன் கூடிய கட்டுமரங்களுக்கு 20 ஆயிரம் ரூபாய் வரையும், முழுவதும் சேதமடைந்த எப்.ஆர்.பி. படகுகள் மற்றும் வலைகளுக்கு 85 ஆயிரம் ரூபாயும், பகுதி சேதமடைந்த எப்.ஆர்.பி. படகுகள் மற்றும் வலைகளுக்கு 30 ஆயிரம் ரூபாய் வரையும், முழுவதும் சேதமடைந்த விசைப்படகுகளுக்கு 5 லட்சம் ரூபாயும், பகுதி சேதமடைந்த விசைப்படகுகளுக்கு 3 லட்சம் ரூபாய் வரையும், வலைகள் மட்டுமே சேதம் அடைந்திருந்தால் 10 ஆயிரம் ரூபாயும், என்ஜின் பழுது நீக்கம் செய்ய 5 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும்.

மக்களுக்கான மீட்பு, நிவாரணம் மற்றும் சீரமைப்பு பணிகளை போர்க்கால அடிப்படையில் அரசு மேற்கொண்டு வருகிறது. இப்பணிகளுக்கு நிதி உதவி அவசியம் என்பதை கருத்தில் கொண்டு ரூ.1,000 கோடி உடனடியாக விடுவித்திட உத்தரவிட்டுள்ளேன்.

லட்சக்கணக்கான மரங்கள், மின் கம்பங்கள், சாலைகள், தென்னை மரங்கள், வேளாண் பயிர்கள், குடிநீர் திட்டங்கள், வீடுகள், பொது கட்டிடங்கள் ஆகியவை பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளன. இப்பேரழிவினை கருத்தில் கொண்டு நிவாரணம் மற்றும் சீரமைப்பு பணிகளுக்கு உடனடியாக தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து தேவையான நிதியினை அளிக்க மத்திய அரசை தமிழ்நாடு அரசு வலியுறுத்தும்.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மேற்படி மாவட்டங்களுக்கு 20-ந் தேதியன்று (இன்று) நான் நேரில் சென்று நிவாரண உதவிகளை வழங்க உள்ளேன். அமைச்சர்கள் அந்தந்த மாவட்டங்களில் தங்கியிருந்து நிவாரண உதவிகளை வழங்குவார்கள்.

விவசாயிகள், மீனவர்கள், ஏழை எளியோர் நலனில் மிகுந்த அக்கறை கொண்டு செயல்படும் அரசு இது. மக்கள் நலனில் அக்கறை செலுத்தும் குடிமக்கள், நிறுவனங்கள், அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் நன்கொடையாளர்கள், தமிழ்நாடு அரசு எடுத்து வரும் மாபெரும் நிவாரணம் மற்றும் மறு சீரமைப்பு நடவடிக்கைகளுக்கு நன்கொடைகள் மூலம் உதவிட வேண்டுகிறேன்.

மேலும், தற்போது தமிழ்நாடு அரசால் போர்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரண மற்றும் சீரமைப்பு பணிகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்குமாறு மீண்டும் கேட்டுக்கொள்கின்றேன். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்