கஜா புயல் பாதிப்பு: பிரதமரை சந்தித்து ரூ.13 ஆயிரம் கோடி நிதி கேட்க முதல்வர் பழனிசாமி முடிவு?

பிரதமர் மோடியை சந்தித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி கஜா புயல் நிவாரணமாக ரூ13 ஆயிரம் கோடி நிதி கேட்க முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Update: 2018-11-21 05:48 GMT
சென்னை, 

‘கஜா’ புயல் கடந்த 16-ந் தேதி தமிழகத்தை தாக்கியதில், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், கடலூர், திண்டுக்கல், சிவகங்கை, கரூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த சேதம் ஏற்பட்டது. 50-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். பலர் காயம் அடைந்தனர். சுமார் ஒரு லட்சத்து 30 ஆயிரம் குடிசை வீடுகளும், ஓட்டு வீடுகளும் சேதம் அடைந்தன.

சுமார் 88 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் உள்ள பயிர்கள் சேதமடைந்தன. குறிப்பாக, நெல், தென்னை, வாழை அதிக அளவில் அழிந்து போய் உள்ளன.

தற்போது, பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் நடந்து வரும் நிலையில், நேற்று முன்தினம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், ‘கஜா’ புயல் பாதிப்பு குறித்தும், மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

இந்த நிலையில், முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ‘கஜா’ புயல் பாதித்த பகுதிகளை நேற்று ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டார்.

இன்று (புதன்கிழமை) சென்னை தலைமைச் செயலகத்தில், அமைச்சர்கள், அதிகாரிகளுடன் அவர் மீண்டும் ஆலோசனை நடத்துகிறார். அப்போது, சேத மதிப்பு குறித்த விவரங்கள் அடங்கிய பட்டியல் தயாரிக்கப்பட இருக்கிறது

இந்தப் பட்டியலுடன் இன்று மாலை 5.20 மணிக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி டெல்லி புறப்படுகிறார். சென்னையில் இருந்து விமானத்தில் செல்லும் அவர் இரவு அங்குள்ள தமிழ்நாடு இல்லத்தில் தங்குகிறார்.

நாளை (வியாழக்கிழமை) காலை 9.45 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசுகிறார்.

இந்த சந்திப்பின்போது, ‘கஜா’ புயல் பாதிப்பு குறித்த விவரங்களை தெரிவிக்கும் அவர், சேதம் பற்றிய இடைக்கால அறிக்கையையும் பிரதமர் நரேந்திர மோடியிடம் வழங்குகிறார். மேலும், மத்திய அரசு வழங்கும் நிவாரண நிதியை விரைவாக விடுவிக்கவும், அதற்கு தகுந்த வகையில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட மத்திய குழுவையும் உடனடியாக அனுப்பி வைக்குமாறும் வேண்டுகோள் விடுக்கிறார்.

சந்திப்பின்போது 13,000 கோடி ரூபாய் அளவுக்கு புயல் நிவாரண நிதியை பிரதமரிடம் முதலமைச்சர் கோரவிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் செய்திகள்