விஞ்ஞான முறை ஆய்வு இருக்கட்டும் மத்திய அரசிடம் இருந்து நிதியை பெறுங்கள் - மு.க.ஸ்டாலின்

தமிழக அரசு கேட்டுள்ள நிவாரண நிதியை மத்திய அரசிடம் இருந்து விரைந்து பெற வேண்டும் என்று ஸ்டாலின் தெரிவித்தார்.

Update: 2018-11-23 08:24 GMT
சென்னை,

சென்னை விமான நிலையத்தில் இன்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது  கஜா புயல் நிவாரணப் பணிகள் பற்றி எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

டெல்டா மாவட்டங்களில் அரசின் சீரமைப்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து அதிருப்தி நிலவுவதாகக் குறிப்பிட்டார். எனவே அங்குள்ள பொதுநல சங்கங்கள், விவசாய சங்கங்கள் மற்றும் அரசியல் கட்சியினருடன் ஆலோசனை நடத்தி பணிகளை விரைவுபடுத்துமாறு முதலமைச்சரை அவர் கேட்டுக் கொண்டார்.

ஹெலிகாப்டரில் சென்று முதலமைச்சர் விஞ்ஞான ரீதியாக அறிவுப்பூர்வமான முறையில் ஆய்வு செய்ததாக கூறியுள்ளார் என்று தெரிவித்த ஸ்டாலின் தமிழக அரசுக்கு மீட்புப் பணியை துரிதப்படுத்துவது பற்றியும் நிவாரண நிதி உதவி பெறுவது பற்றியும் குறிப்பிட்டார்.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அனைவரையும் ஒருங்கிணைத்து மீட்புப் பணிகளை முதலமைச்சர் துரிதப்படுத்த வேண்டும். தமிழக அரசு கேட்டுள்ள நிவாரண நிதியை மத்திய அரசிடம் இருந்து விரைந்து பெற வேண்டும்.

புயல் பாதித்த மாவட்டங்களில் திமுக சார்பில் நிவாரணப் பணிகள் தொடரும் என்றும் மு.க.ஸ்டாலின் உறுதியளித்தார்.

மேலும் செய்திகள்