பிணவறை ஊழியர்கள் பணத்தை போட்டுவிட்டு ஓட்டம் லஞ்ச ஒழிப்பு சோதனையில் பரபரப்பு தகவல்கள்

அரசு ஆஸ்பத்திரிகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனை தொடர்பாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. போலீசாரை பார்த்ததும் சில ஆஸ்பத்திரிகளில் பிணவறை ஊழியர்கள் பணத்தை வீசிவிட்டு தப்பி ஓடிய சம்பவம் நடந்துள்ளது.

Update: 2018-12-07 23:00 GMT
சென்னை ,

இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:- அரசு ஆஸ்பத்திரிகளுக்கு பெரும்பாலும் ஏழை-எளிய மக்கள் தான் சிகிச்சை பெற வருகிறார்கள். பணம் இல்லாத கஷ்டத்தால் தான் அவர்கள் அரசு ஆஸ்பத்திரியை நாடுகிறார்கள்.

ஆனால் அரசு ஆஸ்பத்திரிகளில் ‘ஸ்கேன்’ எடுக்கும் மையங் களிலும், எக்ஸ்ரே எடுக்கும் பிரிவிலும், மகப்பேறு சிகிச்சை பிரிவிலும், பிணவறைகளிலும் அப்பாவி மக்களிடம் பணம் கேட்டு ஊழியர்கள் தொல்லை கொடுப்பதாக எங்களுக்கு ஏராளமான புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.

அதிகளவில் புகார் வந்த 10 அரசு ஆஸ்பத்திரிகளை தேர்ந்தெடுத்து முதல்கட்டமாக சோதனை மேற்கொண்டோம். இந்த சோதனையில் பல்வேறு முறைகேடுகளில் ஆஸ்பத்திரி ஊழியர்கள் ஈடுபட்டு வந்தது கண்டறியப்பட்டுள்ளது.

பிணவறைகளில் பிணத்தை பரிசோதனை செய்துக்கொடுப்பதற்கு ரூ.5 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் பண வசூல் வேட்டையில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. 2 அரசு ஆஸ்பத்திரிகளில், பிணவறைகளில் வேலை பார்க்கும் ஊழியர்கள் லஞ்ச ஒழிப்பு போலீசாரை பார்த்தவுடன் லஞ்சப் பணத்தை ஜன்னல் வழியாக வீசிவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.

இதே போல ‘ஸ்கேன்’ மையங்களிலும், எக்ஸ்ரே பிரிவுகளிலும் வேலை பார்க்கும் ஊழியர்கள் ஒரு ஆஸ்பத்திரியில் பதிவேட்டில் கையெழுத்துவிட்டு, வேலை பார்க்காமல் வெளியே சென்றுவிட்டனர்.

இதனால் இங்கு வந்த நோயாளிகள் ஏமாற்றத்தோடு, சிகிச்சை பெற முடியாமல் திரும்பி சென்றனர். இந்த சோதனையில் கைப்பற்றப்பட்ட லஞ்ச பணம் பெரியளவில் இல்லாவிட்டாலும், இதை ஒரு ஆவணமாக கருதி தவறு செய்த ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க குறிப்பிட்ட ஆஸ்பத்திரி நிர்வாகத்துக்கு பரிந்துரை செய்யப்படும். இதுபோன்ற சோதனை மற்ற அரசு ஆஸ்பத்திரிகளிலும் நடத்தப்படும். அரசு ஆஸ்பத்திரிகளை தொடர்ந்து கண்காணிப்போம். இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

மேலும் செய்திகள்