சென்னையில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது 3 பிரிவுகளின் கீழ் காவல்துறை வழக்குப்பதிவு

சென்னையில் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் மீது 3 பிரிவுகளின் கீழ் காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

Update: 2018-12-10 15:46 GMT

சென்னை,

தீபாவளியையொட்டி நடிகர் விஜய், நடிகை கீர்த்தி சுரேஷ் உள்பட பலர் நடித்து பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய சர்கார் படம் வெளியானது. இந்த படத்தில் தமிழக அரசையும், தமிழக அரசின் இலவச திட்டங்களையும் விமர்சித்து பல்வேறு காட்சிகள் இடம் பெற்றிருந்தன. 

மேலும் அரசு வழங்கும் இலவச மிக்சி, கிரைண்டர் ஆகியவற்றை தீயில் போட்டு எரிக்கும் காட்சி ஒன்றிலும் ஏ.ஆர். முருகதாஸ் நடித்து இருந்தார். இதனால், மாநிலம் முழுவதும் அ.தி.மு.க.வினர் சர்கார் படம் திரையிடப்பட்ட தியேட் டர்கள் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேநேரம், தமிழக அரசை கடுமையாக விமர்சித்ததாக இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் செய்யப்பட்டது. இதையடுத்து முன்ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் ஏ.ஆர்.முருகதாஸ் மனு செய்தார். இயக்குனர் முருகதாசை கைது செய்யக்கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. இதொடர்பான வழக்கு விசாரணையின் போது சர்கார் பட விவகாரம் தொடர்பாக மன்னிப்பு கேட்க முடியாது என்று சென்னை ஐகோர்ட்டில் இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் தரப்பில் கூறப்பட்டது.

முருகதாஸ் முன்ஜாமீன் மனுவை ஐகோர்ட்டு டிசம்பர் 13-ந்தேதிக்கு தள்ளிவைத்தது. மேலும், ‘முருகதாசுக்கு எதிரான புகார் மீது போலீசார் விசாரணை நடத்தலாம். அந்த விசாரணைக்கு முருகதாசும் முழு ஒத்துழைப்பு வழங்கவேண்டும். அந்த புகாரில் முகாந்திரம் இருந்தால், அதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, அதுதொடர்பான விவரங்களை அறிக்கையாக இந்த ஐகோர்ட்டில் போலீசார் தாக்கல் செய்யவேண்டும்’ என்று உத்தரவிடப்பட்டது.

வழக்குப்பதிவு

இந்நிலையில் சென்னையில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது 3 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.  சர்கார் திரைப்படம் தொடர்பாக சமூக ஆர்வலர் அளித்த புகாரில் மத்திய குற்றப்பிரிவு போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது. சர்கார் திரைப்படத்தில் அரசின் இலவச திட்டங்களை தவறாக விமர்சித்துள்ளதாக தேவராஜன் என்பவர் புகார் மனு அளித்துள்ளார். 

மேலும் செய்திகள்