தேர்தல் செலவை வசூலிக்கக்கோரிய வழக்கு: 18 தொகுதி இடைத்தேர்தலுக்கு தடை இல்லை தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்களுக்கு நோட்டீஸ் அனுப்ப ஐகோர்ட்டு உத்தரவு

18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தடை விதிக்க மதுரை ஐகோர்ட்டு மறுத்துவிட்டது. இதுதொடர்பான வழக்கில் தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்கள் 18 பேருக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டது.

Update: 2018-12-10 22:45 GMT
மதுரை, 

மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் நேற்று மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களில் 18 பேர், டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவு அளித்தனர். அவர்கள் கவர்னரை சந்தித்து, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை மாற்றக்கோரி மனு அளித்தனர். இதனால் அவர்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார். இதை எதிர்த்து அவர்கள் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

18 தொகுதிகளும் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்த தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தினால் மக்களின் வரிப்பணம் கோடிக்கணக்கான ரூபாய் வீணாக செலவிடப்படும். ஏற்கனவே தமிழக அரசு கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது.

எனவே 2016-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலின்போது, அந்த 18 தொகுதிகளுக்கு செலவிடப்பட்ட தொகையை, தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 பேரிடம் வசூலிக்க வேண்டும். அந்த தொகையை கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு செலவிட வேண்டும். அதுவரை 18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, “மனுதாரர் கோரும் 18 தொகுதிகளின் இடைத்தேர்தலை நடத்த தடை விதிக்க தேவையில்லை. இந்த வழக்கு விசாரணையானது, ஒருபோதும் இடைத்தேர்தலுக்கு இடையூறாக அமையாது” என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களுக்கும், தேர்தல் ஆணையத்திற்கும் நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர். விசாரணையை அடுத்த மாதம் (ஜனவரி) 4-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.

மேலும் செய்திகள்