குட்கா ஊழல் வழக்கில் அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளரிடம் மீண்டும் விசாரணை

குட்கா ஊழல் தொடர்பாக, அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளரிடம் சி.பி.ஐ. மீண்டும் விசாரணை நடத்தியது.

Update: 2018-12-11 23:56 GMT

சென்னை,

ரூ.40 கோடி குட்கா ஊழல் விவகாரத்தை நீதிமன்ற உத்தரவின் பேரில் சி.பி.ஐ. விசாரித்து வருகிறது.

இவ்வழக்கு தொடர்பாக தொழில் அதிபர் மாதவராவ் உள்பட 6 பேரை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர். அவர்கள் 6 பேர் மீதும், முதல்கட்டமாக கோர்ட்டில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கரின் உதவியாளர் சரவணனிடம் ஏற்கனவே சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.

சரவணனை மீண்டும் விசாரணைக்கு ஆஜராகும்படி சி.பி.ஐ. அதிகாரிகள் சம்மன் அனுப்பி இருந்தனர்.

அதன்படி, சரவணன் நேற்று சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரிபவனில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. அடுத்தகட்டமாக இந்த வழக்கில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடமும் சி.பி.ஐ. விசாரணை நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்