அரசியல் கட்சி அலுவலகங்களிலேயே பிரமாண்டம்: அண்ணா அறிவாலயத்தில் 114 அடி உயரத்தில் தி.மு.க. கொடி மு.க.ஸ்டாலின் ஏற்றி வைத்தார்

அரசியல் கட்சி அலுவலகங்களிலேயே பிரமாண்டமாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் 114 அடி உயரத்தில் தி.மு.க. கொடியை மு.க.ஸ்டாலின் ஏற்றி வைத்தார்.

Update: 2018-12-12 23:41 GMT
சென்னை,

தி.மு.க. தலைமை அலுவலகமான சென்னை அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி மற்றும் புதுப்பிக்கப்பட்ட அண்ணாவின் முழு உருவ வெண்கலச் சிலை திறப்பு விழா வருகிற 16-ந்தேதி நடைபெற உள்ளது.

இதனை முன்னிட்டு நாட்டில் உள்ள அரசியல் கட்சி அலுவலகங்களில் இருக்கும் கொடி கம்பங்களை காட்டிலும் மிகப்பெரிய அளவில், அதாவது 114 அடி உயரத்தில் அண்ணா அறிவாலயத்தின் நுழைவுவாயில் அருகே தி.மு.க. கொடி கம்பம் நடப்பட்டது.

இந்த கம்பத்தில் 20 அடி நீளம் 30 அடி அகலம் உடைய பிரமாண்ட தி.மு.க. கொடியை கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று பொத்தான் மூலம் ஏற்றி வைத்தார். பின்னர் கொடிக்கு ‘சல்யூட்’ அடித்து மரியாதை செலுத்தினார்.

தி.மு.க. கொடி, 114 அடி உயரத்தை சென்றடைய 12 நிமிடங்கள் ஆனது. அப்போது கருப்பு, சிவப்பு நிறத்திலான 5 ஆயிரம் பலூன்கள் வானில் பறக்க விடப்பட்டன. பேண்ட் இசை வாத்தியங்களும் இசைக்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் தி.மு.க. பொருளாளர் துரைமுரு கன், முதன்மை செயலாளர் டி.ஆர்.பாலு, உதயநிதி ஸ்டாலின் உள்பட நிர்வாகிகளும், தொண்டர்களும் பங்கேற்றனர்.

தி.மு.க. கொடி கம்பத்தின் சிறப்பு அம்சங்கள் வருமாறு:-
* கொடி கம்பம் மராட்டிய மாநிலம் புனேயில் தயாரிக்கப்பட்டது. இதன் எடை 2 ஆயிரத்து 430 கிலோ ஆகும். கம்பத்தின் விட்டம் 760 எம்.எம். ஆகும்.

* கொடி 20 அடி நீளம், 30 அடி அகலத்தில், பளபள பாலியஸ்டர் துணியால் மும்பையில் தயாரிக்கப்பட்டது.

* கொடி இரவிலும் பறப்பது தெரியும் வகையில் 2 ஹைபீம் விளக்குகள் பொறுத்தப்பட்டுள்ளன.

* 114 கொடி கம்பத்தை நடுவதற்காக 12-க்கு அடி அளவில் 2 அடுக்கு காங்கீரிட் அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்தியா-பாகிஸ்தான் வாகா எல்லையில் 360 அடி உயரத்தில் தேசிய கொடி கம்பத்தை தயாரித்த நிறுவனம் தான் 114 அடியில் தி.மு.க.வின் கொடி கம்பத்தை தயாரித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

இந்தியாவின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் சிதைக்கின்ற வகையில் மத்தியில் ஆட்சி செய்யும் பாசிச பா.ஜ.க.வை வீழ்த்தி, மதநல்லிணக்கமும் மாநில உரிமைகளும் மக்கள் ஜனநாயகமும் காப்பாற்றப்படுகின்ற வகையில் ஒரு புதிய மெகா கூட்டணி தலைநகர் டெல்லியில் உருவாகியுள்ள நிலையில், அதற்கடுத்த நாளே அந்தக் கூட்டணியின் அடிப்படை நோக்கத்தை நாடெங்கும் வெற்றிச் செய்தியாக அறிவித்திடும் வகையில், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கார் மாநிலத்தேர்தல் முடிவுகள் வெளியாகியிருக்கும் போது பெரு மகிழ்ச்சி பிறக்கிறது.

அந்த மகிழ்ச்சிக்குக் காரணமாக அமைந்திருக்கும் 3 மாநில மக்களுக்கும் நன்றியையும், அங்கு வெற்றியை ஈட்டித் தந்த அகில இந்திய காங்கிரஸ் கட்சித்தலைவர் ராகுல்காந்தி நல்வாழ்த்துகளையும் தெரிவிப்பது ஜனநாயக இயக்கமான தி.மு.க.வின் கடமையாகிறது.

சட்டமன்றத் தேர்தல் நடைபெற்ற 5 மாநிலங்களிலும் பா.ஜ.க. வீழ்த்தப்பட்டுள்ளது. பாசிசத்திற்கு எதிரான போரில் இது தொடக்க வெற்றி. இனியும் தொடரும் இந்த வெற்றி. இந்திய அளவிலும் தமிழ்நாட்டிலும் பாசிச பா.ஜ.க.வும் அதன் தயவில் காலம் தள்ளும் அ.தி.மு.க. அரசும் வீழ்த்தப்படுவது நிச்சயம். ஜனநாயக போர்க்களமான தேர்தல் களத்தில் வெற்றி பெற்று தமிழ்நாட்டின் வெற்றிக் கொடியாக தி.மு.க. கொடி பட்டொளிவீசிப் பறக்கும்.

அதற்கு முன்னோட்ட மாகத்தான், தி.மு.க.வின் தலைமை நிலையமான அண்ணா அறிவாலயத்தின் வாயிலில், நாட்டிலேயே மிக உயர்ந்து நிற்கும் வகையில், 114 அடி உயரமும் 2,430 கிலோ எடையும் கொண்ட கொடிக்கம்பத்தில் இருபதுக்கு முப்பது அடி என்ற பிரமாண்ட அளவிலான கட்சி கொடியினை ஏற்றி வைத்தேன்.

எல்லாத் திசையும் ஒன்று சேர்ந்து நின்று, கொள்கை முழக்கம் எழுப்ப வேண்டிய தருணம் இது என்பதை உணர்த்திடும் வகையில் தி.மு.க.வின் இருவண்ணக் கொடி அண்ணா அறிவாலயம் வாயிலில் கருணாநிதி புகழைப் பாடுவதுபோல பறக்கிறது. விரைவில் வெற்றிக்கொடி பறக்கும் இந்திய அளவிலும், தமிழ்நாட்டிலும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்