கஜா புயல் நிவாரணம் : மத்திய அரசு, தமிழக அரசுக்கு நிதி தர மறுக்கிறது - ஐகோர்ட் மதுரை கிளையில் தமிழக அரசு குற்றச்சாட்டு

கஜா புயல் நிவாரணமாக மத்திய அரசு, தமிழக அரசுக்கு நிதி தர மறுக்கிறது என ஐகோர்ட் மதுரை கிளையில் தமிழக அரசு குற்றஞ்சாட்டி உள்ளது.

Update: 2018-12-19 07:42 GMT
மதுரை,

மதுரை மேலூரை சேர்ந்த வக்கீல் ஸ்டாலின் தாக்கல் செய்த மனுவில், கஜா புயலில் சிக்கி இறந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். இறந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். புயலில் சாய்ந்த தென்னை ஒவ்வொன்றுக்கும் ரூ.50 ஆயிரம் வீதம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இதே போல் ராமநாதபுரத்தை சேர்ந்த வக்கீல் திருமுருகன், தஞ்சாவூர் பேராவூரணியை சேர்ந்த முருகேசன் ஆகியோரும் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்குகளை ஏற்கனவே விசாரித்த மதுரை ஐகோர்ட்டு, கஜா புயல் பாதிப்புகளை பார்வையிட்ட மத்திய குழு தனது இறுதி அறிக்கையை எப்போது சமர்ப்பிக்கும்? என்று கேள்வி எழுப்பி இருந்தது.

இந்த நிலையில் இந்த வழக்குகள் நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான வக்கீல், ‘‘மத்திய குழு தனது இறுதி அறிக்கையை தாக்கல் செய்வதற்கு முன்பாக தமிழக அரசிடம் சில விளக்கங்கள் கேட்டு இருந்தது. அதன்படி அவர்கள் அளித்த விளக்கம் போதுமானதாக இல்லை. எனவே மேலும் கூடுதல் விவரங்கள் கேட்க முடிவு செய்யப்பட்டுள்ளது. விவரம் கிடைத்த சில நாட்களில் மத்திய குழு தனது இறுதி அறிக்கையை தாக்கல் செய்யும். அதன் அடிப்படையில் மத்திய தேசிய பேரிடர் மேலாண்மை குழுவின் செயலாளர் தலைமையில் விவாதிக்கப்பட்டு, 2 வாரத்தில் கஜா புயல் நிவாரணம் வழங்குவது பற்றி முடிவு செய்யப்படும்’’ என தெரிவித்தார்.

இதையடுத்து தமிழக அரசு சார்பில் ஆஜரான வக்கீல், ‘‘மத்திய அரசு கேட்ட கூடுதல் விவரங்கள் 16–ந் தேதியே கொடுக்கப்பட்டு விட்டன’’ என்றார்.

விசாரணை முடிவில் நீதிபதிகள், கஜா புயல் பாதிப்பு தொடர்பாக தமிழக அரசு அளித்த விவரங்கள் போதுமானவையா? என்றும், அதன் அடிப்படையில் எடுக்கப்பட உள்ள நடவடிக்கைகள் பற்றியும் 19–ந் தேதி  (இன்று)  தெரிவிக்க மத்திய அரசு வக்கீலுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இன்று  தமிழக அரசு சார்பில் கஜா புயல் நிவாரணமாக மத்திய அரசு, தமிழக அரசுக்கு நிதி தர மறுக்கிறது என்றும்,  மாநில பேரிடர் நிவாரண நிதியில் போதுமான அளவு நிதி இருந்தும் கஜா புயல் நிவாரணத்திற்கு மத்திய அரசு தரவில்லை என்றும் கூறப்பட்டது.

மாநில அரசு போதிய விளக்கங்களை தர தவறியதால் நிவாரணம் வழங்க கால தாமதம் ஆகிறது. இறுதி அறிக்கை அடிப்படையிலேயே தமிழகத்துக்கு கஜா புயல் நிவாரண நிதி அளிக்க முடியும் என மத்திய அரசு சார்பில் வாதிடப்பட்டது. 

மேலும் செய்திகள்