சேதம் அடைந்த குடிசையை சீரமைக்க மகனை ரூ.10 ஆயிரத்துக்கு கொத்தடிமையாக விற்ற பெற்றோர் நெஞ்சை உலுக்கும் கஜா புயல் சோகம்

கஜா புயலால் சேதம் அடைந்த குடிசையை சீரமைப்பதற்காக தாங்கள் பெற்ற மகனை ரூ.10 ஆயிரத்துக்கு கொத்தடிமையாக பெற்றோர் விற்றனர்.

Update: 2018-12-28 23:41 GMT
தஞ்சாவூர்,

கஜா புயல் கடந்த மாதம் 16-ந் தேதி தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை ஆகிய 4 மாவட்டங்களிலும் மிக கடுமையான சேதத்தை ஏற்படுத்தியது. இந்த புயலால் ஓட்டு வீடுகள், குடிசை வீடுகள் அனைத்தும் சேதம் அடைந்தன. வீடுகளை இழந்த மக்கள் ஆங்காங்கே இருந்த நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு இருந்தனர். முகாம்களில் தங்கி இருந்தவர்கள் தற்போது மெல்ல, மெல்ல மீண்டு வருகிறார்கள். நிரந்தர வருவாய் ஏதும் இல்லாத ஏழைகள், சேதம் அடைந்த வீடுகளை சீரமைக்க முடியாமல் தவித்து வருகிறார்கள்.

இத்தகைய நிலையில் உள்ள ஒரு ஏழை கூலி தொழிலாளி தம்பதியினர், கஜா புயலால் சேதம் அடைந்த தனது வீட்டை சீரமைக்க தாங்கள் பெற்ற மகனையே ரூ.10 ஆயிரத்துக்கு விற்பனை செய்த சம்பவம் நடந்து உள்ளது.
இது பற்றிய விவரம் வருமாறு:-

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அண்ணா குடியிருப்பை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 45). இவரது மனைவி வசந்தா (41). இருவரும் தினக்கூலி தொழிலாளர்கள். இவர்களுக்கு சக்தி (25) மற்றும் 12 வயது நிரம்பிய மகன் என்று இரண்டு மகன்களும், காமாட்சி (10) என்ற மகளும் உள்ளனர்.

நாள்தோறும் காலையில் கணவன்-மனைவி இருவரும் கூலி வேலைக்கு சென்று மாலையில் வீட்டுக்கு திரும்பி வருவார்கள். அதன்பின்னர்தான் இவர்கள் வீட்டில் அடுப்பே எரியும். அன்றாட வாழ்க்கையை கடத்துவதற்கே இவர்களுக்கு போதும்... போதும்... என்று இருந்து வந்த நிலையில் கடந்த மாதம் 16-ந் தேதி இவர்களது வாழ்க்கையை புரட்டி போட்டது கஜா புயல்.

பெரிய, பெரிய மரங்களை வேரோடு பிடுங்கி போட்ட கஜா புயலுக்கு இவர்களது குடிசை வீடு எம்மாத்திரம். சுழன்று அடித்த புயல் இவர்களது குடிசை வீட்டை முற்றிலும் உருக்குலைத்து விட்டு சென்று விட்டது. இதனைத் தொடர்ந்து நிவாரண முகாமில் குடும்பத்துடன் தங்கி இருந்த மாரிமுத்துவுக்கு புயலுக்கு பின்னர் கூலி வேலையும் சரிவர கிடைக்கவில்லை. இருந்த ஒரே வாழ்வாதாரமான குடிசையையும் இழந்து விட்டு, சாப்பாட்டுக்கும் வழியில்லாமல் குழந்தைகளை வைத்துக்கொண்டு மாரிமுத்து-வசந்தா தம்பதியினர் வறுமையில் வாடி வந்தனர்.

தங்களது குடிசையை சீரமைப்பதற்காக அவர்களுக்கு பணம் தேவைப்பட்டது. இந்த பணத்தை புரட்டுவதற்கு அவர்களிடம் பொட்டு தங்கமோ, வேறு எதுவுமோ இல்லை. யாரிடம் சென்று உதவி கேட்பது? தங்களது குடிசையை எப்படி சீரமைப்பது என்று தம்பதியினர் மிகுந்த வேதனையில் வாடினர். அப்போது அவர்கள் இருவரும் கலந்து பேசி தங்களிடம் இருக்கும் ஒரே சொத்தான தங்கள் இரண்டாவது மகனை தற்காலிகமாக விற்று குடிசையை சீரமைப்பது என்று முடிவு செய்தனர்.

இதனையடுத்து கடந்த 15 நாட்களுக்கு முன்பு தனது 12 வயது மகனை ரூ.10 ஆயிரத்துக்கு நாகை மாவட்டம் பனங்குடியை அடுத்த சன்னமங்கலம் கிராமத்தை சேர்ந்த பண்ணை தோட்ட உரிமையாளர் சந்துரு என்பவரிடம் விற்று உள்ளனர். அவர் அந்த சிறுவனை விலைக்கு வாங்கி தனது பண்ணை தோட்டத்தில் வேலைக்கு ஈடுபடுத்தினார். கொத்தடிமை போல் அந்த சிறுவன் வேலையில் ஈடுபடுத்தப்பட்டதாக தெரிகிறது. தோட்டத்து வேலைகளில் மட்டுமல்லாது ஆடு மேய்க்கும் வேலையிலும் அவன் ஈடுபடுத்தப்பட்டான்.

இந்த நிலையில் அந்த சிறுவனை கொத்தடிமை போல் வேலையில் ஈடுபடுத்தப்படுவதை பார்த்தவர்கள், இதுகுறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சிறுவனை மீட்டனர்.

இதற்கிடையில் சிறுவனை கொத்தடிமையாக வைத்திருந்த சந்துரு மீது நாகூர் போலீசார் 8 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். பின்னர் மீட்கப்பட்ட சிறுவனை தஞ்சையில் உள்ள சிறுவர் இல்லத்தில் அதிகாரிகள் தங்க வைத்து உள்ளனர். இந்த நெஞ்சை உலுக்கும் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்