கஜா புயல் பாதிப்பு: படகுகளுக்கான நிவாரண தொகை உயர்வு; முதல் அமைச்சர் அறிவிப்பு

கஜா புயலால் பாதிக்கப்பட்ட படகுகளுக்கான நிவாரண தொகையை உயர்த்தி முதல் அமைச்சர் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.

Update: 2019-01-04 07:52 GMT
சென்னை,

தமிழகத்தில் டெல்டா பகுதியில் உள்ள 12 மாவட்டங்களில் கஜா புயல் கோர தாண்டவமாடியது. தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை ஆகிய 4 மாவட்டங்கள் கடுமையான பேரழிவை சந்தித்தன.

கடலோர  பகுதிகளில் விசைப்படகுகள், என்ஜின் பொருத்தப்பட்ட நாட்டுப்படகுகள், கட்டுமர படகுகள், மீன்பிடி வலைகள், என்ஜின்கள் முற்றிலுமாக சேதமடைந்து இருந்தன.

கஜா புயல் இழப்பீடு பற்றி சென்னையில் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, கஜா புயலால் 125 கிராமங்கள் முற்றிலும் சேதம் அடைந்துள்ளன.

877 நாட்டு படகுகள் முற்றிலும் சேதம் அடைந்துள்ளன.  அவற்றுக்கு தலா ரூ.85 ஆயிரம் வரை வழங்க வழியுள்ளது.  மீனவர்கள் நலனுக்காக ரூ.1,300 கோடியில் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு படகுகள் வழங்குவதற்காக கூடுதல் நிதி ஒதுக்குவது பற்றி ஆலோசிக்கப்படும்.  மீனவர்களின் நிவாரண நிதி கோரிக்கைகள் பற்றியும் கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்படும் என கூறினார்.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு படகுகள் வாங்குவதற்கான வழிகள் குறித்து ஆய்வு செய்யப்படும்.  இயந்திர படகுகளின் சேதத்துக்கு ரூ.3 லட்சம் வரை இழப்பீடு வழங்கினால் பழுது பார்க்க முடியும் என்றும் அவர் கூறினார்.

இந்த நிலையில், கஜா புயலால் பாதிக்கப்பட்ட படகுகளுக்கு அறிவிக்கப்பட்டு இருந்த ரூ.85 ஆயிரம் நிவாரண தொகையை உயர்த்தி முதல் அமைச்சர் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.  இதன்படி ரூ.85 ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் நிவாரண தொகை உயர்த்தப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்