பாரதீய ஜனதா நிர்வாகிகளுடன் கலந்துரையாடல் ‘தமிழகத்தில் கூட்டணி கதவு திறந்தே இருக்கிறது’ பிரதமர் மோடி பேச்சு

தமிழக பாரதீய ஜனதா நிர்வாகிகளுடன் காணொலி காட்சி மூலம் கலந்துரையாடிய பிரதமர் மோடி, கூட்டணிக்கான கதவுகள் திறந்தே இருக்கின்றன என்று கூறினார்.

Update: 2019-01-10 23:30 GMT
அரக்கோணம், 

நாடாளுமன்றத்துக்கு விரைவில் தேர்தல் நடைபெற இருப்பதால் அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் தமிழகத்தில் பாரதீய ஜனதா கட்சியை பலப்படுத்தும் முயற்சியில் பிரதமர் மோடி ஈடுபட்டு உள்ளார்.

அந்த வகையில் நேற்று மதியம் அவர் ஈரோடு, அரக்கோணம், தர்மபுரி, கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதி நிர்வாகிகள் மற்றும் வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுடன் டெல்லியில் இருந்தபடி, காணொலி காட்சி மூலம் உரையாடினார். இதற்காக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த மண்டபங்களில் அந்தந்த தொகுதி நிர்வாகிகள் மற்றும் வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூடி இருந்தனர். அங்கு பெரிய திரையும் அமைக்கப்பட்டு இருந்தது.

அவர்களுடன் மோடி கலந்துரையாடுகையில் கட்சி வளர்ச்சி பணிகள், மத்திய அரசின் திட்டங்கள் பற்றியும், நாடாளுமன்ற தேர்தல் குறித்தும் பேசினார். தமிழில் ‘வணக்கம்’ என்று கூறிவிட்டு தனது பேச்சை தொடங்கிய அவர், தமிழக மக்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்தார்.

அப்போது பொங்கல் விவசாயிகளை கவுரவப்படுத்தும் விழா என்றும், விவசாயிகளின் கடின உழைப்புக்கு மதிப்பளிக்கும் விழாவாக இது கொண்டாடப்படுகிறது என்றும் கூறினார்.

நிர்வாகிகள் எழுப்பிய கேள்விகளுக்கும் அவர் பதில் அளித்தார்.

அப்போது பாரதீய ஜனதா நிர்வாகி ஒருவர், அ.தி.மு.க., ரஜினிகாந்துடன் பாரதீய ஜனதா கூட்டணி அமைக்குமா? என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் அளித்து பிரதமர் மோடி கூறியதாவது:-

நம்முடைய பழைய நண்பர்களை வரவேற்க நாம் எப்போதுமே தயாராக இருக்கிறோம். கூட்டணிக்கான கதவுகள் திறந்தே இருக்கின்றன.

தொலைநோக்கு பார்வைகொண்ட மறைந்த பிரதமர் வாஜ்பாய் 20 ஆண்டுகளுக்கு முன் இந்திய அரசியலில் கூட்டணி அரசை ஏற்படுத்தி புதிய கலாசாரத்தை உருவாக்கினார். பிராந்திய மக்களின் விருப்பங்களுக்கு அவர் முக்கியத்துவம் அளித்தார். அவருடைய அந்த கலாசாரத்தை தற்போதும் பாரதீய ஜனதா பின்பற்றி வருகிறது.

2014-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா தனிப்பெரும்பான்மை பெற்ற போதிலும் கூட்டணி கட்சிகளை மந்திரிசபையில் சேர்த்துக் கொண்டு ஆட்சி நடத்தி வருகிறது.

ஆனால் காங்கிரஸ் பிராந்திய கட்சிகளை அவமதிப்பதோடு, மாநில மக்களின் நலன்களை பற்றி கவலைப்படுவது இல்லை.

பாரதீய ஜனதா கட்சியினர் எப்போதும் மக்களுடன் தொடர்பில் இருக்கவேண்டும். கூட்டணிகள் எப்படி இருந்தாலும், மக்களுடன் அமைக்கும் வலுவான கூட்டணிதான் வெற்றிக்கூட்டணியாக இருக்கும்.

இவ்வாறு மோடி கூறினார்.

அவர் தொடர்ந்து பேசுகையில் கூறியதாவது:-

பாரதீய ஜனதா அரசு விவசாயிகளுக்கு ஏராளமான திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. இவற்றை எல்லாம் வாக்குச்சாவடி குழு பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் வீடு, வீடாக கொண்டு செல்ல வேண்டும். விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள் என்று அனைவரையும் சந்தித்து பாரதீய ஜனதா கட்சியை தமிழகத்தில் வலுவான கட்சியாக உருவாக்க வேண்டும். தகவல் தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்தி கட்சியை வளர்க்கவேண்டும்.

கடந்த காங்கிரஸ் ஆட்சி காலத்தில் ராணுவத்துக்கும், நாட்டின் பாதுகாப்புக்கும் அதிக முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. எதுவாக இருந்தாலும் பேரம் பேசுவதிலேயே அவர்கள் குறியாக இருந்தார்கள்.

கடந்த 2004-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டுவரை நமது மிகப்பெரிய அண்டை நாடுகளில் ஒன்று 400 போர் விமானங்களை வாங்கி உள்ளது. இன்னொரு அண்டை நாடு அதிக அளவில் ராணுவ தளவாடங்களை குவித்து இருக்கிறது. ஆனால், அந்த நேரத்தில் இந்தியாவில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி, தனக்கு சாதகமாக பேரத்தில் ஈடுபட்டது.

காங்கிரஸ் ஆட்சியின்போது இடைத்தரகராக செயல்பட்ட நபரை சமீபத்தில் பிடித்து வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்கு கொண்டு வந்து இருக்கிறோம். அந்த நபர் காங்கிரஸ் கட்சியின் முதல் குடும்பத் துக்கு மிகவும் நெருங்கியவர்.

தற்போதைய நமது ஆயுத கொள்முதல் குறித்து பின்னால் இருந்து தாக்குதல் தொடுப்பவர்கள், காங்கிரஸ் ஆட்சி காலத்தில் நாட்டின் பாதுகாப்பு எப்படி இருந்தது என்பதை பார்க்க வேண்டும்.

ஆனால், இந்திய ராணுவத்துக்கு இடைத்தரகர் இல்லாத சிறந்த கொள்முதல்களை பாரதீய ஜனதா அரசு செய்து வருகிறது. ராணுவ வீரர்களுக்கு பாதுகாப்பான தளவாடங்கள், உபகரணங்கள் வழங்கப்பட்டு இருப்பதால், நாடும், ராணுவ வீரர்களும் பாதுகாப்பாகவும் வலிமையாகவும் உள்ளனர்.

முத்ரா வங்கி திட்டத்தின் கீழ் தமிழகத்தில் ஏராளமானோருக்கு கடன்உதவிகள் வழங்கப்பட்டு உள்ளன. இந்த திட்டத்தில் மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் அதிக அளவில் பயன்பெற்று உள்ளனர். உஜ்வாலா திட்டத்தின் கீழ் தமிழகத்தில் அதிக அளவில் இலவச கியாஸ் இணைப்புகள் வழங்கப்பட்டு இருக்கின்றன. பிரதமரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஒரு குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறும் திட்டத்தை தமிழகத்தில் முனைப்புடன் செயல்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. மத்திய அரசின் வளர்ச்சி திட்டங்கள் தமிழகத்தில் சிறப்பான முறையில் செயல்படுத்தப்படுகிறது.

இந்தியாவை இதுவரை ஆண்ட அரசுகள் புரோக்கர்களின் கட்டுப்பாட்டுக்குள் இருந் தன. இவர்களை தாண்டி கடை கோடி மக்களுக்கு நலத்திட்டங்கள் சென்று சேரவில்லை.

இதை தடுக்க பாரதீய ஜனதா ஆட்சியில் அடித்தட்டு மக்களுக்கும் நலத்திட்டங்கள் சென்று சேர வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டு உள்ளது. மாணவ-மாணவிகளுக்கு கல்வி சலுகைகள், மானியங்கள் மற்றும் இதர சலுகைகள் அவரவர் வங்கி கணக்குக்கு நேரடியாக சென்று சேர்கிறது.

உதாரணமாக கடந்த காலத்தில், 90 ஆயிரம் கோடி ரூபாய் நலத்திட்டங்களுக்கு ஒதுக்கினால், இடைதரகர்களிடம் சென்று, 9 ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே மக்களுக்கு சென்று சேர்ந்தது. பாரதீய ஜனதா அரசு பொறுப்பேற்ற பிறகு டெல்லியில் இருந்த அதிக அளவிலான இடைத்தரகர்களின் அலுவலகங்கள் மூடப்பட்டு உள்ளது. பாரதீய ஜனதா அரசு ஊழல் இல்லாத அரசாக திகழ்கிறது.

இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

மேலும் செய்திகள்