வல்லூர் அனல் மின்நிலையம் செயல்படுவதற்கு எதிராக ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை

வல்லூர் அனல் மின்நிலையம் செயல்படுவதற்கு எதிராக சென்னை ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்து உள்ளது.

Update: 2019-01-14 23:10 GMT

புதுடெல்லி, 

திருவள்ளூர் மாவட்டம் எண்ணூர் அருகே உள்ள வல்லூர் அனல் மின் நிலையம், மத்திய அரசின் விதிமுறைகளை மீறி சதுப்பு நில பகுதிகளில் நிலக்கரி சாம்பலை கொட்டுவதால் அப்பகுதியில் சுற்றுசூழல் மாசடைந்து வருவதாக, குறிப்பாக மீனவர்கள் அதிகம் பாதிக்கப்படுவதாக சென்னை ஐகோர்ட்டில் ஆர்.ரவிமாறன் உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்து இருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, சாம்பல் கழிவுகளை சதுப்பு நில பகுதிகளில் கொட்டுவதற்கு தடை விதித்து உத்தரவிட்டது. மேலும் அனல் மின் நிலையத்திற்கான மத்திய அரசின் அனுமதி காலாவதியாகி, அனுமதியை புதுப்பிப்பதற்கான கோரிக்கை நிலுவையில் உள்ள நிலையில், ஆலை தொடர்ந்து இயங்குவதற்கும் கடந்த நவம்பர் மாதம் 20–ந்தேதி ஐகோர்ட்டு தடை விதித்தது.

இந்த நிலையில், இந்த தடையை நீக்கக்கோரி அனல்மின் நிலையம் சார்பில் ஐகோர்ட்டு டிவி‌ஷன் பெஞ்சில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், பி.ராஜமாணிக்கம் ஆகியோர் கடந்த 2–ந்தேதியன்று, தடையை நீக்க முடியாது என்று கூறியதுடன், அனல்மின் நிலையத்தை திறப்பது குறித்து மத்திய சுற்றுச்சூழல்துறை அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

ஐகோர்ட்டின் இந்த உத்தரவுக்கு எதிராக அனல்மின் நிலையத்தின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு, சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் அசோக் பூ‌ஷண், சஞ்சய் கி‌ஷண் கவுல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

விசாரணை தொடங்கியதும், வல்லூர் அனல் மின் நிலையம் இயங்குவதற்கு இடைக்கால தடை விதித்து கடந்த நவம்பர் 20–ந்தேதியும், ஜனவரி 2–ந்தேதியும் ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவுகளுக்கு தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் இந்த வழக்கில் பதில் அளிக்குமாறு கோரி எதிர்மனுதாரர்கள் ஆர்.ரவிமாறன் உள்ளிட்ட அனைவரும் நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவு பிறப்பித்தனர்.

மேலும் செய்திகள்