பணிக்கு திரும்பாத ஆசிரியர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க முடியாது - நீதிபதிகள்

பணிக்கு திரும்பாத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட முடியாது. அது அரசின் பொறுப்பு என ஐகோர்ட் நீதிபதிகள் கூறி உள்ளனர்.

Update: 2019-01-25 09:04 GMT
சென்னை,

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ சார்பில் காலவரையற்ற வேலைநிறுத்தம் நடந்து வருகிறது.

தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சுமார் 13 லட்சம் பேர் உள்ளனர். இவர்களில் 8 லட்சம் பேர் காலவரையற்ற போராட்டத்தில் குதித்துள்ளனர். இதனால் அரசு அலுவலகங்கள், பள்ளிகளில் வழக்கமான பணிகள் முடங்கியுள்ளன.

அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள் சங்கத்தினரின் வேலைநிறுத்தம் இன்று  4-வது நாளாக தொடருகிறது. நாகையில்  கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் 1000-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.  பணிக்கு வராத ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.

இந்த போராட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று சென்னை அரும்பாக்கத்தை சேர்ந்த கோகுல் என்ற 11-ம் வகுப்பு மாணவன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருந்தார். ”இந்த வழக்கில் ஆசிரியர்களின் போராட்டத்துக்கு தடை விதிக்கிறோம். மாணவர்களின் நலன் கருதி ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட்டுவிட்டு, உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும். அதிகபட்சம்  வெள்ளிக்கிழமைக்குள் (இன்று) பணிக்கு திரும்ப வேண்டும்” என்று உத்தரவிட்டு இருந்தனர்.

ஆனால்  தொடர்ந்து  ஆசிரியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில்  மாணவர் கோகுலின்  வக்கீல்,  வேலைக்கு திரும்பாத ஆசிரியர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார்.

அதற்கு நீதிபதிகள், ஆசிரியர்கள் இன்றைக்குள் வேலைக்கு திரும்பத்தான் உத்தரவிட்டோம்.  பணிக்கு திரும்பாத ஆசிரியர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க முடியாது. பணிக்கு திரும்பாத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட முடியாது. அது அரசின் பொறுப்பு! பணிக்கு திரும்ப வேண்டும் என்கிற உத்தரவை மீறிய ஆசிரியர்களை கண்காணித்து நடவடிக்கை எடுப்பது அரசின் வேலை. ஆசிரியர்களின் வேலைநிறுத்த நோட்டீசுக்கு தடை விதிக்கவில்லை  என கூறி உள்ளனர்.

மேலும் செய்திகள்