பியூஷ் கோயல், தங்கமணி சந்திப்பு பற்றி அமைச்சர் ஜெயக்குமார் புதிய விளக்கம்

மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் உடன், அமைச்சர் தங்கமணி கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் புதிய விளக்கம் அளித்துள்ளார்.

Update: 2019-02-17 04:45 GMT
சென்னை,

நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான தமிழக பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளராக மத்திய ரெயில்வே துறை மந்திரி பியூஷ் கோயல் நியமிக்கப்பட்டு உள்ளார்.  இதனை தொடர்ந்து தேர்தலுக்கான கூட்டணி அமைப்பது பற்றிய பேச்சுவார்த்தைக்காக கடந்த வியாழ கிழமை இரவு அவர் சென்னை வந்துள்ளார்.

அவர் செய்தியாளர்களிடம் பேசும்பொழுது, அ.தி.மு.க.வுடன் ஆலோசனை நடைபெறும் என்ற தகவலை மறுப்பதற்கு இல்லை.  முதல் அமைச்சர் பழனிசாமியுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவதற்கான வாய்ப்பு உள்ளது என கூறினார்.

அதன்பின் அவர் அன்றிரவே அமைச்சர் தங்கமணியை சந்தித்து பேசினார்.  இதனால் அ.தி.மு.க. மற்றும் பாரதீய ஜனதா ஆகிய இரு கட்சிகளுக்கும் இடையே கூட்டணி உறுதியாகி உள்ளது என தகவல் வெளியானது.

இந்த நிலையில், மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் உடன், அமைச்சர் தங்கமணி கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை அடையாறில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மத்திய மாநில அரசுகளின் வளர்ச்சி திட்டங்கள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தியதாக கூறினார். கூட்டணி பேச்சுவார்த்தை முடிந்த பின்பு அ.தி.மு.க. தலைமை அதிகாரபூர்வமாக அறிவிக்கும் என்றும் அவர் கூறினார்.

மேலும் செய்திகள்