தமிழகத்தில் 5-ம் வகுப்பு மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு இந்தாண்டு பொதுத்தேர்வு - பள்ளிக் கல்வித்துறை இயக்குநரகம்

மத்திய அரசின் அறிவுறுத்தல்படி தமிழகத்தில் 5-ம் வகுப்பு மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு இந்தாண்டே நடத்தப்படும் என பள்ளிகல்வித்துறை இயக்குநரகம் அறிவித்துள்ளது.

Update: 2019-02-20 10:18 GMT
1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களையும் காட்டாயம் தேர்ச்சி செய்ய வேண்டும் என்ற முறை தற்போது அமலில் இருந்துவருகிறது. இதன் காரணமாக எப்படியும் தேர்ச்சி பெறலாம் என்பதால் மாணவர்கள், படிப்பில் முழுக்கவனத்தையும் செலுத்துவதில்லை என்றும் மேலும் மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்படுவதாகவும் மத்திய அரசு கூறி வந்தது. 

அதற்காக இலவச மற்றும் கட்டாயக் கல்வித் திட்டத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டு 5-ம் வகுப்பு மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்த மத்திய அரசு முடிவு செய்தது. மேலும் மத்திய அரசின் முடிவை மசோதாவாகவும் தாக்கல் செய்தனர். இந்த நடைமுறையினை அந்தந்த மாநிலங்களே முடிவு செய்து கொள்ளலாம் என்றும் மத்திய அரசு அறிவித்தது.

இதனையடுத்து கட்டாய தேர்ச்சி என்பதால் மாணவர்கள் அதிகபட்சமாக 8-ம் வகுப்பு வரையும் படிப்பார்கள், இல்லையெனில், மாணவர்கள் படிப்பை பாதியிலேயே நிறுத்திவிடுவார்கள் என்றும் கூறப்பட்டது. மேலும் இந்த புதிய முறைக்கு தமிழகத்தில் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த முறையை தமிழக அரசு நடைமுறைப்படுத்தக்கூடாது என்றும் கோரிக்கை விடுத்தனர். இது குறித்து கருத்து தெரிவித்திருந்த தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், பரிசீலனை செய்யப்பட்டு முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

இந்நிலையில் மத்திய அரசின் அறிவுறுத்தல்படி தமிழகத்தில் 5-ம் வகுப்பு மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு இந்தாண்டே நடத்தப்படும் என பள்ளிகல்வித்துறை இயக்குநரகம் அறிவித்துள்ளது. இந்தாண்டு முதலே பொதுத்தேர்வு நடைபெறும் என்றும் இது தொடர்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிகல்வித்துறை இயக்குநர் சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும் செய்திகள்