சார்ஜாவில் இருந்து கடத்தல்: சென்னை விமான நிலையத்தில் ரூ.40 லட்சம் தங்கம் பறிமுதல் பெண் கைது

சார்ஜாவில் இருந்து சென்னைக்கு கடத்திவந்த ரூ.40¾ லட்சம் தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், இது தொடர்பாக இளம்பெண் ஒருவரை கைது செய்தனர்.

Update: 2019-03-16 19:27 GMT
ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு சார்ஜாவில் இருந்து திருவனந்தபுரம் வழியாக விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர்.

அப்போது சென்னையை சேர்ந்த ஜெசிமா பானு(வயது 21) என்பவர் அந்த விமானத்தில் இருந்து இறங்கி வந்தார். அவர் மீது சந்தேகம் அடைந்த சுங்க இலாகா அதிகாரிகள், அவரை நிறுத்தி விசாரித்தனர். அதிகாரிகளிடம் அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசினார்.

ரூ.40¾ லட்சம் தங்கம்

இதனால் அவரது உடைமைகளை சோதனை செய்தனர். ஆனால் அதில் எதுவுமில்லை. பின்னர் அவரை தனியறைக்கு அழைத்துச்சென்று, பெண் அதிகாரிகளை வைத்து சோதனை செய்தனர். அதில் அவரது உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்து இருந்ததை கண்டுபிடித்தனர்.

அவரிடம் இருந்து ரூ.40 லட்சத்து 75 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 250 கிராம் எடை கொண்ட தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கைது

சார்ஜாவில் இருந்து வந்த விமானத்தில் அந்த தங்கத்தை கடத்தி வந்த மர்ம ஆசாமி, அதை விமானத்தில் மறைத்து வைத்துவிட்டு சென்றுவிட்டார். பின்னர் திருவனந்தபுரத்தில் இருந்து உள்நாட்டு பயணியாக அந்த விமானத்தில் வந்த ஜெசிமா பானு, விமானத்தில் மறைத்து வைத்து இருந்த கடத்தல் தங்கத்தை எடுத்து தனது உள்ளாடைக்குள் மறைத்து சென்னைக்கு கடத்தி வந்ததாக தெரிகிறது.

இது தொடர்பாக ஜெசிமா பானுவை கைது செய்த சுங்க இலாகா அதிகாரிகள், அவரிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்