தமிழகத்தின் வளர்ச்சிக்கு முதலமைச்சர் பழனிசாமி எதுவும் செய்யவில்லை - மு.க. ஸ்டாலின் பேச்சு

தமிழகத்தின் வளர்ச்சிக்கு முதலமைச்சர் பழனிசாமி எதுவும் செய்யவில்லை என ஸ்ரீபெரும்புதூரில் திமுக தலைவர் ஸ்டாலின் பேசினார்.

Update: 2019-04-14 15:11 GMT
சென்னை,

ஸ்ரீபெரும்பதூரில் திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலுவை ஆதரித்து மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார் அப்போது அவர் பேசியதாவது:-

தாய்மொழியாம் தமிழுக்கு ஆபத்து வரும்போதெல்லாம் தமிழ்க்கொடி ஏந்தி போராடியவர் கருணாநிதி. தமிழகம் தகவல் தொழில்நுட்பத்துறையில் முன்னிலையில் இருப்பதற்கு வித்திட்டவர் கருணாநிதி.  குஜராத் குறித்த போலி பிம்பத்தை உருவாக்கி ஆட்சிக்கு வந்தார் மோடி.  அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறிவிட்டார். 

8 வழிச்சாலை திட்டத்தை அமல்படுத்த உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது நிலத்தை ஒப்படைக்கவும் உத்தரவிட்டுள்ளது. உயர்நீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்துவது அரசின் கடமையா இல்லையா? 

8 வழிச்சாலை திட்டத்தை அமல்படுத்துவோம் என நிதின் கட்காரி கூறுவது நீதிமன்ற அவமதிப்பு இல்லையா?  8 வழிச்சாலை திட்டத்தை நிறைவேற்றுவோம் என நிதின் கட்காரி கூறும் போது முதலமைச்சர் தடுக்காதது ஏன்? ஆறுமுகசாமி ஆணையம் 6 முறை சம்மன் அனுப்பியும் ஓபிஎஸ் விசாரணைக்கு ஆஜராகாதது ஏன்?  என கேள்வி எழுப்பினார். 

சட்டசபையில் நான் ஓபிஎஸ்சை பார்த்து லேசாக சிரித்தேன். மறுநாள் அவருக்கு பதவி போனது. தேர்தல் ஆணையத்தில் திமுக தொடர்ந்து மனு அளித்ததே என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? திமுக வெற்றி பெறும் என உளவுத்துறை மூலமாக தெரிந்து கொண்டு ஐ.டி.ரெய்டு நடத்துகிறார்கள்.

கொள்கை ரீதியில் அமைந்தது திமுக கூட்டணி, வியபார ரீதியில் அமைந்தது அதிமுக கூட்டணி.  நீட் தேர்வை அரசியல் பிரச்சனையாகவோ, கட்சிப்பிரச்சனையாகவோ திமுக பார்க்கவில்லை.

ஓபிஎஸ்- ஈபிஎஸ் ஆட்சிக்கு வந்தவுடன் தமிழகத்திற்குள் நீட் தேர்வு நுழைந்துவிட்டது.  கருணாநிதி முதலமைச்சராக இருந்தவரை தமிழகத்திற்குள் நீட்தேர்வு நுழைய முடியவில்லை.

இவ்வாறு அவர் பேசினார். 

மேலும் செய்திகள்