திசையன்விளையில் தபால் ஓட்டை விற்ற போலீஸ் ஏட்டு மீது வழக்கு தி.மு.க. பிரமுகர் கைது

தபால் ஓட்டை விற்ற போலீஸ் ஏட்டு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக தி.மு.க. பிரமுகர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து ரூ.7 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2019-04-15 22:22 GMT
திசையன்விளை,

நெல்லை மாவட்டம் திசையன்விளை பஜாரில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி தினேஷ்குமார் தலைமையில் ஒரு குழுவினர் நேற்று முன்தினம் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மொபட்டில் ஒருவர் வந்தார். அவரை பறக்கும் படையினர் வழிமறித்து நிறுத்த முயன்றனர். ஆனால் அவர் நிற்காமல் மொபட்டில் வேகமாக சென்றார்.

உடனே அவரை பறக்கும் படையினர் தங்களது வாகனத்தில் விரட்டிச் சென்று வழிமறித்து நிறுத்தினர். பின்னர் நடத்திய விசாரணையில் அவர், திசையன்விளையை சேர்ந்த ஜெயராஜ் (வயது 59) என்பதும், தி.மு.க. பிரமுகரான இவர் அந்த கட்சியின் முன்னாள் நகர செயலாளர் என்பதும் தெரியவந்தது.

அவரது மொபட்டில் சோதனை செய்தபோது, உவரி போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றும் அந்தோணி சேகர் என்பவரின் தபால் ஓட்டு, தி.மு.க. தேர்தல் சின்னம் பொறிக்கப்பட்ட ‘பூத் சிலிப்‘ மற்றும் ரூ.7 ஆயிரம் இருந்தது தெரியவந்தது. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து பறக்கும் படை அதிகாரி தினேஷ்குமார் திசையன்விளை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜூடி விசாரணை நடத்தினார். பின்னர் போலீசார், பணம் தருவதாக கூறி தபால் ஓட்டை வாங்கியதாக வழக்குப்பதிவு செய்து ஜெயராஜை கைது செய்தனர்.

மேலும், தபால் ஓட்டை பணத்தின் அடிப்படையில் விற்பனை செய்ததாக ஏட்டு அந்தோணி சேகர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவர் திசையன்விளை ஆர்.சி. தெருவை சேர்ந்தவர் ஆவார்.

தபால் ஓட்டை வாங்கிய தி.மு.க. பிரமுகர் கைது செய்யப்பட்டதும், அதை விற்ற போலீஸ் ஏட்டு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்