ரூ.2 கோடி நகை கொள்ளை வழக்கில் 200 பவுன் நகை மாயம் : சினிமா பாணியில் தடயங்களை மறைத்தது அம்பலம்

ரூ.2 கோடி நகை கொள்ளை வழக்கில் கள்ளக்காதல் ஜோடி கைதான நிலையில், கொள்ளைபோன நகையில் 200 பவுன் மாயமாகி உள்ளது. சினிமா பாணியில் தடயங்களை மறைத்து இருப்பதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Update: 2019-05-01 23:26 GMT
கோவை,

கோவை ராமநாதபுரத்தில் உள்ள முத்தூட் நிதிநிறுவனத்தில் ரூ.2 கோடி மதிப்புள்ள 803 பவுன் தங்கநகை கொள்ளையடிக்கப்பட்டது. இந்த வழக்கில் நிதிநிறுவனத்தின் பெண் ஊழியர் ரேணுகாதேவி(26), அவரது கள்ளக்காதலன் சுரேஷ்(30) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

ரேணுகாதேவி 3 வருடங்களுக்கு முன்பு ஒரு செல்போன் நிறுவனத்தில் வேலை பார்த்தபோது அங்கு ‘சிம்கார்டு’ வாங்க வந்த சுரேசுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறி இருவரும் ஜாலியாக இருந்தனர். பட்டதாரியான சுரேஷ் பங்கு சந்தையில் முதலீடு செய்ததில் பணத்தை இழந்து ரூ.20 லட்சம் வரை கடன் ஏற்பட்டு திணறிவந்தார்.

இதற்கிடையே முத்தூட் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்த ரேணுகாதேவியை பார்க்க சென்றபோது அங்கு ஏராளமான வாடிக்கையாளர்கள் நகையை அடகுவைத்து பணம் பெற்றுச்செல்வதை சுரேஷ் கண்டார். நிதி நிறுவனத்தில் நகைகளை கொள்ளையடித்தால் கடனை அடைத்துவிட்டு, ஒரே நாளில் பணக்காரனாகிவிடலாம் என்ற விபரீத எண்ணம் அவருக்கு தோன்றியது.

கொள்ளை திட்டத்தை ரேணுகாதேவியிடம் கூறியபோது முதலில் அவர் மறுத்தார். ஆனால் இதற்கு உடன்படாவிட்டால் இருவரும் சேர்ந்து எடுத்த புகைப்படங்களை கணவருக்கு அனுப்பிவிடுவேன் என மிரட்டி சம்மதிக்கவைத்தார்.

ரேணுகாதேவியுடன் பணிபுரிந்த பெண் ஊழியருக்கு சுரேசை தெரியும் என்பதால் அவர் இல்லாதபோது கொள்ளையடிக்கலாம் என காத்திருந்தனர். சம்பவத்தன்று அந்த பெண் ஊழியர் விடுமுறையில் செல்லவே மாற்று ஊழியராக வேறொரு கிளையில் பணிபுரியும் திவ்யா பணிக்கு வந்தார்.

அன்று கொள்ளையடிக்க திட்டமிட்டு ரேணுகாதேவி, திவ்யாவின் சாப்பாட்டில் மயக்கமருந்து கலந்தார். அதை சாப்பிட்டதும் திவ்யாவுக்கு லேசான மயக்கம் ஏற்பட்டது. உடனே ரேணுகாதேவி காபி வாங்கி கொடுத்தார். அதிலும் மயக்க மருந்தை கலந்தார். திவ்யா காபி குடித்ததும் மயங்கி மேஜையிலேயே படுத்துவிட்டார்.

அப்போது ரேணுகாதேவி காதலன் சுரேசுக்கு செல்போனில் ‘பூனை பால் குடிச்சிருச்சு, பூனை தூங்கிடுச்சு’ என குறுந்தகவல் அனுப்பினார். அதைப்பார்த்த பின்னர் தான் சுரேஷ் முகத்தை கைக்குட்டையால் மறைத்துக்கொண்டு நிதிநிறுவனத்துக்குள் புகுந்தார். அப்போது அரை மயக்கத்தில் இருந்த திவ்யா நீங்கள் யார்? ஏன் முகத்தை மறைத்துள்ளர்கள்? என கேட்டதும் சுரேஷ் அவரை ஓங்கி அறைந்தார். இதனால் அவர் மயக்கம் போட்டு விழுந்ததும் திட்டமிட்டபடி நகைகளை கொள்ளையடித்து சென்றார்.

சுரேசின் சொந்த ஊர் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம். அங்கு அவரது தந்தை நகைபட்டறை நடத்திவந்தார். சுரேஷ் கொள்ளையடித்த அனைத்து நகைகளையும் நள்ளிரவு 1 மணிமுதல் அதிகாலை 5 மணிவரை உருக்கி, தங்க கட்டிகளாக மாற்றினார். அவற்றை சாமி படங்கள் மற்றும் குளியல் அறையில் உள்ள சுவிட்ச்-பாக்சுகளிலும் மறைத்துவைத்தார்.

போலீசார் ரேணுகாதேவியின் செல்போன் அழைப்புகளை சேகரித்து விசாரித்ததில் அவர்கள் சிக்கிக்கொண்டனர். சுரேசை கைது செய்த போலீசார் ஈரோடு அழைத்துச்சென்று அவரது வீட்டில் இருந்து 600 பவுன் எடை கொண்ட தங்கக்கட்டிகளை மீட்டனர். சுரேஷ், ரேணுகாதேவி ஆகியோரை மாஜிஸ்திரேட்டு முன்பு ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

நிதிநிறுவனத்தில் இருந்து 803 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டதால் மீதி தங்கம் எங்கே? என்ற குழப்பம் நிலவுகிறது. 200 பவுனை சுரேஷ் மறைத்துவைத்து நாடகமாடுகிறாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எனவே சுரேசை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

போலீசிடம் மாட்டிக்கொள்ளாமல் கொள்ளையடிப்பது எப்படி? என்ற விவரங்களை சுரேஷ் இணையதளத்தில் பார்த்து தகவல்களை சேகரித்துள்ளார். மோட்டார் சைக்கிளில் சென்றால் கண்காணிப்பு கேமரா மூலம் சிக்கிக்கொள்வோம் என்று பஸ்சில் சென்று நகைகளை கொள்ளையடித்தார். அவற்றை விற்க முயன்றாலும் போலீசார் பிடித்துவிடுவார்கள் என கருதி அவற்றை வீட்டுக்கு கொண்டுசென்று உருக்கிவிட்டார். ‘அயன்’ சினிமா பாணியில் தங்க கட்டிகளை சாமி படத்துக்குள்ளும், குளியலறை சுவிட்ச்-பாக்சுக்குள்ளும் மறைத்துவைத்தார். பின்னர் கோவை வந்து காதலி ரேணுகாதேவியை மருத்துவமனையில் சந்தித்தார். நகையை விற்று ரூ.1 கோடியை சுரேஷ் எடுத்துக்கொள்வதாகவும், ரூ.50 லட்சத்தை ரேணுகாதேவிக்கு கொடுப்பதாகவும் உறுதி அளித்தார்.

சுரேஷ் கொள்ளையடிக்க சென்றபோது அணிந்திருந்த உடை, தொப்பி, கைக்குட்டை, செருப்பு அனைத்தையும் பெட்ரோல் ஊற்றி தீவைத்து எரித்துவிட்டதாகவும் வாக்குமூலத்தில் கூறி உள்ளார். 

மேலும் செய்திகள்